தாழ்த்தப்பட்டவர்கள் யார்…? – தந்தைப்பெரியார்


தோழர்களே! இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.சவுந்திர பாண்டியன், என். சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். ஆனால் நான் பேச வேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்; பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.
பகுத்தறிவு

உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும்; பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவபலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணர வேண்டும். கால தேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.

உங்கள் கொள்கை

இங்கு பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சங்கத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத்தக்கதாகும். அரசியலில் உங்கள் வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய்விட்டது. மற்ற வகுப்புகள் லக்ஷியத்திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு லக்ஷியத்துக்கும் நிலைக்கும் பெரியதொரு வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டியதாயிற்று? அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். மேல் ஜாதியாருக்குத் தந்திரமும் சூழ்ச்சியும் இயற்கையாகவே உண்டு. அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததனால்தான் நீங்கள் கீழ் ஜாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள். உங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக் கொண்டார். கோபித்து என்ன செய்வது? பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா? அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமை வேண்டியதில்லை அலலவா? சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக்கூடம் ஆகியவற்றின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. அதற்கு இன்னமும் பல இடங்களில் தடை இருந்து வருகிறது.

கோவில் பிரவேசம்

திருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினீர்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தாய்நாட்டில் உங்கள் நிலை என்ன? உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது. இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப்பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்.

நியாயமாய் பேசப்போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகல கோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். கோவில்களில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிகடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சில அறைகளுக்குள் செல்லப்படாதவர்களாகவும் தான் இருந்து வருகிறோம். உங்கள் இழிவைப் பற்றிப் பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனுதாபத்தின் கருத்தாகும். பந்தியில் சாப்பிடும் போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்ததில்லையா? அதுபோல்தான் உங்கள் குறையோ இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப் பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்.

காங்கிரசில் சேருவது

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு “அரசியல்” கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு “அரசியல்” கட்சிகளுடன் சேராமல் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப் போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான்.

காங்கிரஸ் ஏற்பட்டு 50-வருஷ காலம் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத்துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன்பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10-வருஷ காலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது. அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களானால் – மேல் ஜாதிக்காரர்கள் பின்னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாங்கூர் பிரகடனம்

திருவாங்கூர் ஆலயப்பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது? தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா? அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா? அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவு போட்டு தடுத்ததைப்பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்டபோது சர்.சி.பி.அய்யர் என்ன பதில் சொன்னார்? அந்த தடை உத்தரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார்.

அதாவது அந்த பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் “ஏதாவது ஒரு வேலையின் பேரில் – அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது” என்று சொல்லி குறிப்பிட்ட 144-தடை உத்தரவு, வேண்டுமென்றே அவசியம் இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்குச் சங்கடமுண்டாக்குவதைத் தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத்தரவு என்றும் அது அவசியம் தான் என்றும் சொன்னார்.

ஆகவே திருவாங்கூர் திவான் சர்.சி.பி. அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள், நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும், சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள். இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லீமாக துருக்கி தொப்பி போட்டார்கள், பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான் (கத்தி) கட்டி தொங்க விட்டுக் கொண்டு சீக்கியர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் காங்கிரஸ், மதம், கோவில், சாமி ஆகியவற்றையெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல உரிமையும் தானாக உங்களைத் தேடிக்கொண்டு வரும்.

பட்டம் மாற்றுவதில் பயனில்லை

அப்படிக்கு இல்லாமல் “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக் கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதி திராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்கு சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.

அதுபோலவே பார்ப்பனரல்லாதார்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேள் ஆளர், ராஜர் ராயர் என்கின்றதான பல பெயர்கள் இருந்ததாலேயே சமூக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை. ஆதலால் பெயரைப் பற்றி கவலைப்படாதீர்கள்; இழிவும் குறையும் போக வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும் மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும் தான் சரியான மருந்தாகும்.

கோடரிக் காம்புகள்

சில கோடரிக் காம்புகள் அவர்களுடன் ஒத்துழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கமோ, பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும்? நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும் தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச்சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.

கேள்விகள்

1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப் போனது என்றும், நாற்றமடிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிக்கைகளில் பார்க்கிறேன். நான் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மற்றப்படி வித்தியாசம் இல்லை.

2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார்.

அதற்கும் பதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூலபுருஷரான தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்களின் தொண்டினால் என்றுதான் சொல்லுவேன். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களின் பலரும் அவருக்கும் போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும் நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றியுடையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும், மிதவாதக் கட்சிக்கும், தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால் அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவில்லை.

இந்தியாவில் ஒரே கட்சிதான்

இன்று இந்தியாவில் அரசியல் கொள்ளையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியை அடைந்து பணமும் அதிகாரமும் பெற வேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சி தான் உண்டு. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள், பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத்துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம். சில கட்சி புரியாத மாதிரி பேசலாம். சில கட்சி அடியோடு பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் பேசலாம் இது தான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை.

ஜஸ்டிஸ் கட்சி

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமான மட்டும் தான் நடத்திக் கொடுப்பதாய் பச்சையாய்ச் சொல்லுகிறது. அதில் உள்ள தலைவர்களுக்குள்ளோ அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின்பற்றுபவர்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் பொது நோக்குடையவர்கள் அல்லாதவர்களாகவும் சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது தார்ஜின் (இடம்) விட்டுத்தான் தீரவெண்டும். மற்றபடி இன்ற சமுதாயத்துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சிதான் “சஞ்சீவி” மருந்து என்று சொல்லுவேன்.

காங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால் அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமஉரிமை அளிக்க மறுப்பதையும் மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கிய கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர்கள் பழைமை விரும்பிகளாக இருப்பதாலேயே

வருணாச்சிரமதர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சுயமரியாதைப் பிரசாரம்

3. சுயமரியாதை இயக்கப்பிரசாரம் ஏன் செய்யவில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது.

நானும் என் தோழர்களும் ஒரு அளவுக்கு செய்துகொண்டு தான் வருகிறோம். ஆனால் முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக்கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நானும் என் தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம்தான் செய்வோம்.

தோற்குமா? ஜெயிக்குமா?

4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா? என்று கேட்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்தால் நான் மகிழ்ச்சி அடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக் கூடும் என்கின்ற தன்மையால் இயக்கப் பிரசாரம் பலமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கட்சி ஜெயித்தால் தலைவர்கள் பதவி பெற்றவர்கள் ஆகியவர்களது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில் சிதறிக்கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலக்ஷிய புத்தியும் பொறுப்பற்ற தன்மையும் சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் அதற்குக் கொள்கை என்று நான் கருதவில்லை. ஏனெனில் அதற்குக் கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்யம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.

சமதர்மம்

5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரி சமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்காலப் பேச்சு. ஆனால் அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகின்றது. அதனாலேயே நாம் அதை சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால் இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமருகிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வார் பயத்தினாலா? இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் 10-ஆயிரம் செலவு செய்துக் கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே எஜமானே என்று நின்றுகொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதில் உங்களுக்கு இன்னமும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றேன். ஆகையால் சமூதாய சமதர்ம வேலையைத் தான் நான் இப்போதும் இன்றும் செய்துவருகிறேன்.

பொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால் காங்கிரஸ் அதற்குப் பரம விரோதி என்பதோடு அது ஒரு காட்டிக் கொடுக்கும் ஸ்தாபனமுமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவுகரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல் அதாவது சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்மப் பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத் தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கவுரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– தமிழர்தலைவர் தந்தை பெரியார்

– (கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க 4-ஆவது ஆண்டு விழாவில் தலைமை வகித்த தோழர் ஈ.வெ.ரா அவர்களின் முடிவுரைப் பிரசங்கம். ‘குடிஅரசு’ – 10.01.1937)

Advertisements

One Response to “தாழ்த்தப்பட்டவர்கள் யார்…? – தந்தைப்பெரியார்”

  1. reverse phone lookup Says:

    *very nice post, i certainly love this website, keep on it


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: