ஜனவரி, 2010 க்கான தொகுப்பு

தமிழ்நாட்டைத் துண்டாடுவது தற்கொலை முயற்சி

ஜனவரி 29, 2010

இந்திய விடுதலைப் போராட்டம் 1905 ஆம் ஆண்டுதான் மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக வடிவெடுத்தது. அதற்குக் காரணம் வங்கப் பிரிவினை. அடிமைப்பட்ட இந்தியாவில் ஒரு மொழி பேசும் ஒரு தேசிய இன மக்களின் தாயகத்தை மத வேறுபாட்டிற்காகவோ அல்லது நிர்வாக வசதிக்காகவோ பிரிக்கக் கூடாது என்பதற்கான சான்றுகள்தாம் மேலே நாம் பார்த்தவை.

ஏனெனில், உலகத்தில் பெரும்பாலான நாடுகள் தேசிய இனத் தாயக அடிப்படையில்தான் அமைந்துள்ளன. நாடுகளின் எல்லை, படை வலிமையைக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட முறை மாற்றப்பட்டு, தேசிய இனத் தாயக அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஜனநாயகக் கோட்பாடு ஐரோப்பாவில் 18-19ஆம் நூற்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. ‘தேச அரசு உருவாக்கம்’ (Nation State Formation) என்று இக்கோட்பாடு அழைக்கப்பட்டது.

ஓட்டோமான் பேரரசு, ஆஸ்திரியப் பேரரசு ஆகியவற்றில் ஒடுங்கிக் கிடந்த ஐரோப்பிய தேசங்கள் தனித்தனித் தேசிய அரசுகளாக உருவாயின. பிரிந்து கிடந்த ஜெர்மானியச் சிற்றரசுகள் ஒரு தேசமாக இணைக்கப்பட்டன. இதைச் சாதித்த பிஸ்மார்க் இந்தியாவின் பாடநூல்களில் பாராட்டப்படுகிறார்.

வெவ்வேறு தேசிய இனச் சிற்றரசுகளை இந்தியாவுடன் இணைத்ததற்காக வல்லபாய் படேலை ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ என்று முரண்பட்ட வகையில் ஒப்பிடுகின்றனர். ஜெர்மானிய பிஸ்மார்க், ஒரு மொழி பேசும் ஜெர்மானிய இனத்தவரை ஒரு நாட்டுக்குள் கொண்டு வந்தார். வல்லபாய் படேலோ வெவ்வேறு மொழி பேசும் வெவ்வேறு சிற்றரசுகளை ஒரு துணைக் கண்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். முன்னது தேச ஒருங்கிணைப்பு. பின்னது தேச மறுப்பு இணைப்பு. அதுவரை வங்காளம் ஒரே மாநிலமாக இருந்தது. விடுதலைப் போராட்ட வீச்சு மற்ற மாநிலங்களைவிட வங்காளத்தில் கூடுதலாக இருந்தது.

அவ்வெழுச்சியைச் சீர்குலைப்பதற்காக வெள்ளை ஏகாதிபத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டது. மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்குக் கிழக்கு வங்காளமென்றும், இந்துக்களுக்கு மேற்கு வங்காளமென்றும் இரண்டாகப் பிரித்தது. அவ்வாறு இரண்டாகப் பிரித்ததை எதிர்த்து, ஒருங்கிணைந்த வங்கத்தின் இந்து மக்களும் இஸ்லாமிய மக்களும் போர்க்கோலம் பூண்டனர்.

அந்த வங்காள எழுச்சி வெள்ளையர்கள் ஆதிக்கத்துக்கு எதிரான விடுதலைக் கிளர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது. வங்கத்தில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் திரள் போராட்டம் பற்றிக் கொண்டது.

1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாநிலத்தையும் கிழக்கு மாநிலத்தையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என்று கூறப்பட்டது. அதன்படியே வடக்கும் கிழக்கும் ஒரே மாநிலமாக ஆக்கப்பட்டது. பின்னர் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கை இரண்டாகப் பிரிக்க விரும்பினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவ்வாறே இரண்டாகப் பிரித்தனர்.

இன்றைக்கும் 1) தொடர்ச்சியான தாயக நிலம், 2) பொது மொழி, 3) பொதுப்பண்பாடு, 4) பொதுப் பொருளியல் வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றில் நிலைத்துள்ள சமூகத்தை ஒரு தேசம் என்று அளவிடும் வரையறுப்பு நடைமுறையிலுள்ளது. அந்த அடிப்படையில்தான் புதிய புதிய தேசங்கள் பிறந்து கொண்டுள்ளன. அவை உலக நாடுகளின் ஏற்பிசைவை பெற்றுக் கொண்டுள்ளன. சோவியத் ஒன்றியம் பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது. யுகோஸ்லோவியா, செக்கோஸ்லோவோகியா ஆகியவை தேசிய இன அடிப்படையில் பல நாடுகளாகப் பிரிந்தன. ‘எரித்திரியா’, ‘கிழக்கு திமோர்’ ஆகிய நாடுகள்; புதிதாகப் பிறந்தன.

இப்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ‘தெலங்கானா’ மாநிலம் தனியே பிரிக்கப்படுவது தேசிய இனத் தாயக அடிப்படையில் அல்ல. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் தெலங்கானா மாநிலத்தைப் பிரிக்கக் கோரி சாகும் வரை பட்டினிப் போராட்டம் 2009 நவம்பர் 29ஆம் நாள் தொடங்கினார். அவர் உடல் நலம் மிகவும் மோசமடைந்ததையொட்டி தெலங்கானா பகுதி முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

இதனால் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 9.12.2009 அன்று தெலங்கானாவைத் தனியே பிரிக்க ஒத்துக் கொண்டனர். இந்திய அரசின் உறுதிமொழிக்குப் பிறகு 11ஆம் நாள் சந்திரசேகரராவ் தமது உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டார். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தின் இதரப் பகுதிகளில் மாநிலப் பிரிவினையை எதிர்த்துப் போராட்டம் தீவிரமாகியது.

ஆந்திரப் பிரதேசம் நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் தமிழ்நாட்டை விடப் பெரிய மாநிலம். மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

1. இராயல சீமா
2. தெலங்கானா
3. கடலோர ஆந்திரா

தெலங்கானா பகுதி ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்தது. இராயல சீமாவும், கடலோர ஆந்திராவும் வெள்ளையரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன. அவை சென்னை மாகாணத்தில் இணைந்திருந்தன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு நிஜாம் ஆட்சி நீக்கப்பட்டது. 1953ல் ஆந்திரப் பிரதேசம் மொழிவாரி மாநிலமாகத் தனியே ஒருங்கிணைக்கப்பட்டது.

1970களிலிருந்தே தெலங்கானா பகுதியைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. அதற்கு அப்பகுதி மக்கள் கூறும் காரணம், இராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளைக் கவனிப்பது போல தெலங்கானா பகுதியை ஆட்சியாளர்கள் கவனிப்பது இல்லை. முதலமைச்சர்களும் தெலங்கானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

அரிதாக நரசிம்மராவ் தெலங்கானா பகுதியிலிருந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலங்கானா பகுதி மக்கள் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். மேலும் தெலங்கானா பகுதியில் பேசப்படும் தெலுங்கிற்கும் கடலோர ஆந்திராவில் பேசப்படும் தெலுங்கிற்கும் பேச்சு வழக்கில் வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

தனித் தெலங்கானா மாநிலத்துக்குத் தில்லி ஆட்சியாளர்கள் பச்சைக் கொடி காட்டியதைக் கண்டதும் தமிழ் நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் தமிழகத்தில் முன் வைக்கின்றனர்.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ‘செந்தமிழ் நாடு’ என்ற தனி மாநிலம் வேண்டுமென மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் மரு.சேதுராமன் கேட்கின்றார். வடதமிழ் நாட்டைத் தனிமாநிலமாக அமைக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மரு.இராமதாசு கேட்கின்றார்; கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்று கொங்கு நாடு முன்னேற்றப் பேரவைத் தலைவர் பெஸ்ட் இராமசாமி கூறுகின்றார்.

தென்தமிழ் நாடு புறக்கணிக்கப்படுகிறது; வடதமிழ்நாட்டுக்கு நிகராகப் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று சேதுராமனும் மற்றும் சிலரும் கூறுகின்றனர். சிறு மாநில அமைப்புகள்தான் வளர்ச்சிக்கு உகந்தவை என்கிறார் இராமதாசு.

பெரிய கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழகத்தைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்க்கின்றன. இந்தப் பிரிவினைக் கோரிக்கைக்கு தெற்கு வடக்கு மேற்கு தமிழக மக்களிடையே ஆதரவில்லை. பிரிவினைக் கோரிக்கை வைத்திருக்கும் மரு. சேதுராமன், மரு. இராமதாசு, பெஸ்ட் இராமசாமி ஆகிய மூவருக்குமிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இம்மூவரும் சாதி அடிப்படையிலான அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.

அவரவர் சாதி சார்ந்த மக்கள் அவரவர் கோரும் ‘மாநிலங்களில்’ திரட்சியாக வாழ்கின்றனர். அவர்கள் கூறுவது போல் தமிழகம் மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால் தனிப்பெரும் மக்கள் தொகை கொண்ட தங்கள் சாதி அமைப்பு மாநில ஆட்சியைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்குமென்று கருதுகிறார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் சிறிய மாநில நிர்வாகம் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமென்று கூறுகிறார்கள்.

மொழிவாரி மாநிலங்களைச் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்க வேண்டுமென்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் பெருவிருப்பமாகும். வெவ்வேறு மொழி பேசக் கூடிய பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து நிர்வாக வசதிக்கேற்ப ஒரே மாநிலமாக்க வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாகும். இவ்வாறு இந்திய ஆளும் வர்க்கம் கருதக் காரணம் என்ன? மொழி வழித் தேசிய இனத் தாயக மாநிலங்கள் இந்தியத் தேசியத்தின் எதிர்மறையாகும்; அவை இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும்; மைய அரசின் அதிகாரங்களுக்கு சவாலாக இருக்கும் என்பவையே அக்காரணங்கள்.

இதே காரணங்களை மனதில் வைத்து, இந்தியா விடுதலை அடைந்தபின் மொழி வாரி மாநிலம் அமைப்பதை காங்கிரஸ் கட்சியும் ஜனசங்கமும் (இப்போது பா.ஜ.க) எதிர்த்தன. விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி மொழி வாரி மாநிலம் அமைப்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி வந்தது. 1920 ஆம் ஆண்டு நாகபுரியில் கூடிய இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாடு காங்கிரஸ் மாநிலக் குழுக்களை மொழிவழி மாநில அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்தின் படி அமைக்கப்பட்டதுதான் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’.

அப்பொழுது சென்னை மாகாணத்தில் ஆந்திர கர்நாடக கேரளப் பகுதிகள் இருந்தன. ஆனால் காங்கிரஸ் மாநில கமிட்டிகள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. விடுதலை அடைந்த பின் மொழி வாரி மாநிலம் அமைப்பதை அதே காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. பண்டித நேரு மொழி வாரி மாநிலம் அமைப்பதை விரும்பவில்லை. இந்தியத் தேசியத்தை வலியுறுத்திய அனைத்திந்தியத் தலைவர்கள் மொழி வாரி மாநிலப் பிரிவினையை எதிர்த்தனர்.

இந்துத் தேசியம் பேசிய ஜனசங்கம் மொழி வாரி மாநிலம் அமைப்பதை எதிர்த்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் பின்வருமாறு கூறினார், “சுயாட்சி உரிமையுள்ள மொழி வழி மாநிலங்களை அமைப்பது பிராந்திய வாதத்தை வளர்த்து இறுதியில் அபாயகரமான பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். இதற்குப் பதில் கிராம, மாவட்ட, வட்டார, பிராந்திய மட்டங்களில் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களை இணைத்து அமைக்கப்படும் ஜனபாத அமைப்புகள் இப்போதுள்ள மாநில அரசுகளை விட மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்”.(ChristopheJafferelet, Hindu Nationalist Movement and Indian Politics, உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்துப் பாசிசமும் – பழ.நெடுமாறன் பக்.693)

ஜனசங்கத்தின் பொதுச் செயலாளர் தீனதயாள் உபாத்தியாயா ஜனபாத நிர்வாக அமைப்பு பற்றிய திட்டத்தை வெளியிட்டார். இந்தியாவிலுள்ள மாநில எல்லைகளை அழித்துவிட்டு நிர்வாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஒரு ஜனபாத அமைப்பு உருவாக்க வேண்டும்.

அப்படி இந்தியா முழுவதிலும் நூறு ஜனபாத அமைப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்த ஜனபாத அமைப்புகள் இயங்கும். மொழி வழி மாநிலங்களும் அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும். இக்கருத்தை 1950களின் தொடக்கத்தில் தனது தேர்தல் அறிக்கையில் ஜனசங்கம் வெளியிட்டது. (மேற்படி நூல் – பழ.நெடுமாறன், பக்;. 693)

அனைத்திந்திய பெருமுதலாளிகளும் மொழி வாரி மாநிலம் அமைப்பதை எதிர்த்தனர். மும்பை மாநிலத்தை மராட்டியம், குஜராத் என்று மொழி அடிப்படையில் பிரிப்பதை குஜராத்தி, மார்வாடி, பார்சி முதலாளிகளும் வணிகர்களும் எதிர்த்தனர். அவர்களில் 69 முக்கியப் புள்ளிகள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை மொழி வாரி மாநிலம் அமைப்பது குறித்து அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட தார் குழுவிடம் அளித்தனர்.

1952 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராடினர். விடுதலைப் போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு இக்கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை பட்டினிப் போராட்டம் சென்னையில் தொடங்கினார். 56ஆம் நாள் உயிர்துறந்தார். இதனால் ஆந்திரப் பிரதேசம் போர்க்களமானது. அதன் பிறகு 1952 டிசம்பர் 19ஆம் நாள் ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைப்பதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி 1953ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைக்கப்பட்டது.

அடுத்தடுத்து பல்வேறு தேசிய இன மக்கள் போராடி மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. எனவே இப்பொழுது உள்ள மொழி வாரி மாநிலங்களை வளர்ச்சி அடிப்படையில் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. போன்ற இந்தியத் தேசிய வெறிக் கட்சிகளுக்கு இனிப்பானதே. இருந்தாலும் அந்தந்த மாநிலத்திலுள்ள தங்கள் கட்சிக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக இப்பிரிவினைகளை இந்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சற்றுக் காலம் தள்ளி அரங்கேற்றுகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலக் கோரிக்கையை காங்கிரஸின் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. பா.ஜ.க. அக்கோரிக்கையை ஆதரித்தது.

இப்பொழுது கடலோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமா ஆகிய பகுதிகளிலுள்ள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தெலங்கானா பிரிவினையை ஏற்காததால் அப்பிரிவினையை நிலுவையில் வைத்துள்ளது இந்திய அரசு. ஆந்திரப் பிரதேசம் தெலுங்கு தேசிய இன மக்களின் தாயகமாகும். நிர்வாக வசதி, வளர்ச்சி என்ற காரணங்கள் கூறி அதைப் பிரிப்பது சரியல்ல என்பதே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாடு. அதற்கு மேல் நாம் அதில் தலையிட விரும்பவில்லை.

மொழி, தாயகம், பண்பாடு, வாழ்முறை ஆகியவற்றால் தனித்தன்மையுடன் விளங்கும் கூர்கா மக்கள் மேற்கு வங்கத்திலும், கூர்க் இன மக்கள் கர்நாடகத்திலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். இவர்கள் தங்கள் தேசிய இனத் தாயகத்தைத் தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி போராடுகிறார்கள். இவர்கள் தனித்தேசிய இனத்தவர் என்பதால் தங்கள் தாயகத்தை தனிமாநிலமாகப் பெற அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் ஆவர்.

இவர்களுடைய தனிமாநிலக் கோரிக்கையை த.தே.பொ.க. ஆதரிக்கிறது. தெலுங்கானா சிக்கலும், இவையும் ஒன்றல்ல. தெலங்கானா மாநிலம் ஏற்கப்பட்டதைக் காரணமாக வைத்துத் தமிழ் நாட்டை மூன்று பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்று சிலர் கோருவதை த.தே.பொ.க. வன்மையாக எதிர்க்கிறது.

தனித்தனி நாடுகளாக விளங்குவதற்குரிய மக்கள் தொகை, நிலப்பரப்பு, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் கொண்டுள்ள தமிழ்நாடு போன்ற தேசிய இனத் தாயகங்களைப் பிரித்தால் அது இந்தியத் தேசிய வெறியர்களுக்குக் கொண்டாட்டமாகும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்று உரிமைகளைத் தமிழகத்திற்கு மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு இப்பிரிவினை பெரும் மகிழ்வைத் தரும்.

தமிழ்நாட்டைத் துண்டாடுவதை நாம் ஏன் எதிர்க்கிறோம்?

1. தமிழர்களின் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் பிளவு படுவதால் இப்பொழுது தமிழகத்திற்கு இருக்கின்ற அரசியல் வலு குறைந்து விடும்.

2. இதனால் அன்றாடம் மாநில உரிமைகளைப் பறிப்பதில் குறியாக உள்ள நடுவண் அரசை நிர்ப்பந்தித்துத் தமிழக உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாது போகும்.

3. பிரித்தாளும் சூழ்ச்சி அடிப்படையில் தமிழக மாநிலங்கள் இடையே இந்திய அரசு பகையை வளர்த்துவிடும்.

4. அயல் இனத்தவர் இப்பொழுதே மிகை எண்ணிக்கையில் தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். தமிழகம் சிறு மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தால் இன்னும் மிகை எண்ணிக்கையில் பிற மாநிலத்தவர் தமிழகத் தொழில், வணிகம், கல்வி, வேலை ஆகியவற்றைக் கைப்பற்றுவர். மண்ணின் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுவர். புதுச்சேரி மாநிலம் இதற்கு எடுத்துக்காட்டாக இப்போது உள்ளது.

5. தமிழ்நாட்டில் தமிழ் மொழிதான் ஆட்சி மொழி என்று இன்று உள்ள நிலை மாறி பிற மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆகக் கூடிய சூழல் உருவாகும். இப்பொழுதே உரியவாறு தமிழைக் கல்வி மொழி ஆக்க முடியாத சூழலில் தமிழகம் பிளவுபட்டால் தமிழ் வழிக்கல்வி என்பது கைகூடாமலே போய்விடும்.

6. அயல் இனத்தவர் அதிகமாகக் குடியேறக் குடியேற வாக்காளர் விகிதத்தில் அயலாரின் தாக்கம் அதிகமாகும். மண்ணின் மக்களின் மாநிலக் கட்சிகள் வலுக்குறைந்து அனைத்திந்திய கட்சிகளே ஆதிக்கம் பெறும். இதற்கும் இப்பொழுது உள்ள எடுத்துக்காட்டு புதுச்சேரி மாநிலமே.

7. தமிழ்த் தேசிய இனம் என்ற தனித்தன்மையும் அதன் வலுவான இருப்பும் சிதறி, தமிழர்கள் தமிழ்நாட்டுக் குள்ளேயே பத்தோடு பதினொன்றாகி விடுவர். இவையே தமிழகத்தைச் சிறு மாநிலங்களாகப் பிரிப்பதை நாம் ஏற்க மறுப்பதற்கான முதன்மைக் காரணங்கள்.

உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் அகிய இந்தி மாநிலங்களில் புதிதாக உத்திராஞ்சல், சட்டீஸ்கர், ஜார்கண்ட் என்று சிறு மாநிலங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தி மாநிலங்களின் தன்மை வேறு தமிழகத்தின் தன்மை வேறு. புதிதாகப் பிரிக்கப்பட்ட மேற்படி மாநிலங்களில் இந்திதான் ஆட்சி மொழி மற்றும் கல்வி மொழி.

இந்தி மாநிலங்களில் வெவ்வேறு பழங்குடிச் சார்புகள் இருந்தாலும் அங்கு தமிழர்களைப் போன்று வளர்ச்சியடைந்த ஒரு தேசிய இனம் உருவாகவில்லை. இந்தியை அலுவல் மொழியாகவும் கல்வி மொழியாகவும் கொண்டுள்ள அம்மாநிலங்களில், இந்தி யாருக்கும் தாய் மொழி இல்லை. அவர்களுக்குப் போஜ்பூரி, அவதி, மைதிலி, கல்யாணி, ராஜஸ்தானி போன்ற பல மொழிகள் தாய்மொழியாக இருக்கின்றன.

ஆனால் அத்தாய்மொழிகள் பொது மொழி (Standard language) என்றளவுக்கு வளர்ச்சியடையாத கிளை மொழிகளாகவே (Dialect languag) இருக்கின்றன. இம்மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் உருது பேசும் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இந்தியும் உருதும் கிட்டத்தட்ட ஒரே மொழிதான். வடமொழி வரிவடிவத்தில் எழுதினால் இந்தி என்றும் அரபி வரி வடிவத்தில் எழுதினால் உருது என்றும் அறியப்படுகிறது.

இக்காரணங்களால் இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான அடையாளங்களோடு ஒரு தேசிய இனம் உருவாகவில்லை. உ.பி. , ம.பி. , பீகார் போன்ற இந்தி மாநிலத்தவர்க்கு ‘இந்தியன்’ என்ற இல்லாத தேசிய இனமே அடையாளமாக உள்ளது. அவர்களுக்கென்று தனித்தன்மையுள்ள தேசிய இனம், தமிழ்த்தேசிய இனம் போன்று எதுவும் இல்லை. ஆகவே அம்மாநிலங்களை நிர்வாக வசதி கருதி சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்தாலும் அங்கு தேசிய இனப் பாதிப்பும் பொது மொழிப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

விரிந்து பரந்து கிடக்கும் இந்த இந்தி மண்டலத்தின் மக்கள் தொகை, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 225 பேர் இந்த இந்தி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியன் என்ற பொது அடையாளத்தையும், இந்தி என்ற பொது மொழியையும் ஏற்றுள்ள இக்கூட்டத்திலிருந்துதான் இந்தியப் பெருமுதலாளிகளும் பார்ப்பன சக்திகளும் தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை அடையாளம் கண்டுள்ளன. இங்கு அவை ஆழக் கால் பதித்துள்ளன.

அதற்கு இந்து மதம் பேருதவி புரிகிறது. இம்மண்டலத்திலிருந்துதான் பெரும்பாலும் பிரதமர்களும் மெய்யான அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களும் உருவாகிறார்கள். எனவே நடைமுறையில் இந்தி மண்டலம் ஓர் உறுப்பாக செயல் வடிவம் பெற்றுள்ளது. அம்மாநிலங்களுக்குள் சிறுசிறு வேறுபாடு இருப்பது இந்த ஒரு மண்டல உணர்வைப் பாதிப்பதில்லை.

மேற்கண்ட கூறுகளைக் கவனத்தில் கொள்ளாமல் தமிழ் நாட்டையும் இந்தி மண்டலத்தில் சிறுசிறு மாநிலங்கள் உருவாவது போல் பிரிக்க நினைத்தால் அது தமிழினம் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டு வீழ்த்திக் கொள்ளும் முயற்சியாக முடியும்.

இந்தி மண்டலத்தில் காலூன்றி நிற்கும் பெருமுதலாளிய – இந்துத்துவா சக்திகள் தமிழ்நாடு வளர்ப்பதற்காகவே பிரிவினை கோருவதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வரையறுப்பில் வளர்ச்சி என்பது என்ன?

வடநாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பெரும் பெரும் தொழிற்சாலைகள், இந்திய அரசின் பெரும் பெரும் ஆலைகள், விண்முட்டும் கட்டடங்கள் போன்றவைதாம் வளர்ச்சியின் அடையாளங்களா? இவ்வளர்ச்சி சமூகத் திலுள்ள மிகச் சிறுபான்மையான பெருமுதலாளிகள், பெருவணிகர்கள், உயர் நடுத்தர வர்க்கத்தினர் போன்றோர் வளர்ச்சியே ஆகும். ஒட்டு மொத்த சமூக வளர்ச்சியாகாது.

இவை கூவம், அடையாறு போன்ற பல தூயநீர் ஆறுகளை சாக்கடைகளாக மாற்றியிருக்கின்றன. இதே போல் காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகளும் போன்ற வடமொழி சாராத தேசிய இனத்தாயகங்களைச் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்கும் சூழ்ச்சித் திட்டத்தில் ஏற்கெனவே இருக்கின்றன. இதன் வளர்ச்சிப் போக்கில், அடுத்தடுத்துள்ள வெவ்வேறு மொழி பேசுகின்ற பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு நிர்வாக மாநிலம் அமைக்கும் திட்டத்திலும் அவர்கள் இருக்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களை அவற்றை அடுத்துள்ள சித்தூர் மற்றுமுள்ள ஆந்திர மாவட்டங்களோடு சேர்த்து ஒரு மாநிலமாக்குவது. மருத்துவர் இராமதாசு போன்றோர் கோரும் தமிழகப் பிரிவினை மேற்படி தமிழின எதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகவே அமையும்.

இந்திய அரசு இன்னொரு ‘மாநிலங்கள் சீரமைப்புக் குழுவை” உருவாக்கி, புதிய மாநிலக் கோரிக்கைகள் குறித்து ஆராயப் போவதாக செய்திகள் வருகின்றன. அப்போது இராமதாசு போன்றவர்கள் தமிழ்நாட்டைத் துண்டாட கோரிக்கை வைப்பார்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தில்லி ஆதிக்கவாதிகள் கணக்குப் போட்டிருப்பார்கள்.

புதிதாக மாநிலக் கோரிக்கையாக எழுந்தால் அதுபற்றி தொடர்புடையவர்களோடு பேசி தீர்வு காண வேண்டுமே தவிர, இவ்வாறு மேலும் ஒரு மாநில சீரமைப்புக் குழுவை ஏற்படுத்துவது நயவஞ்சகத்திட்டமாகும். தமிழகத்தைத் துண்டாட விரும்புவோர் தமிழ்நாட்டில் வளர்ச்சி குன்றியுள்ள வட்டாரங்களை சாக்கடைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கூவம், அடையாறு சாக்கடை ஆறுகளின் கரை நெடுக குடிசை போட்டு வாழும் இலட்சக்கணக்கான குடிமக்கள்தாம் சென்னைக் கோபுரங்களின் அஸ்திவாரங்கள். இப்படிப்பட்ட குடிசைகள் தமிழ்நாடு முழுவதும் பரவவேண்டும் என்பதுதான் தமிழக மாநிலப் பிரிவினையாளர்களின் இலட்சியமா?

‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் குறித்து இயக்கம் நடத்தி வரும் மருத்துவர் இராமதாசு சென்னை போன்ற இயற்கைக்கு முரணான வளர்ச்சியைத் தமிழகமெங்கும் விரிவாக்க விரும்புகிறாரா? வேளாண் நிலங்களைச் சாகடித்து அவற்றின் மேல் விண்முட்டும் கான்கிரீட் கல்லறைகள் எழுப்புவதுதான் வளர்ச்சியா? இவ்வாறு ஐரோப்பாவில் முதலாளியம் ஏற்படுத்திய இயற்கைக்கு முரணான வளர்ச்சியினால் உண்டான தீய விளைவுகளை நீக்கிடவே அந்நாடுகளில் பசுமை இயக்கங்கள் வளர்ந்துள்ளன.

‘வளர்ச்சி’ குறித்து அடிப்படைக் கோட்பாடுகள் இல்லையெனில், ஒருவரை விழுங்கி இன்னொருவர் வளர்வது, இயற்கையை அழித்துச் செயற்கையைப் புனைவது என்ற முதலாளிய இலாப வெறிப் போட்டியும், தனி நபர் நுகர்வு வெறித் தணிப்பும்தான் வளர்ச்சி என்றாகிவிடும்.

குறிப்பிட்ட சில சிறப்புப் பொருளியல் மண்டலங்களை எதிர்ப்பது, அரசுத் துறை தொழிற்சாலைகளை எதிர்ப்பது என்ற அளவில் தமது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வேளாண் பாதுகாப்புக் கொள்கையை மருத்தவர் இராமதாசு சுருக்கிக் கொள்ளக்கூடாது. சென்னை – திருப்பெரும்புதூர் மண்டலம் போன்ற வளர்ச்சியைத் தான் பொதுவில் அவர் விரும்புகிறார் எனில் அவரது கொள்கைகள் ஐயத்திற்கு இடமாகி விடும்.

உலகமய முதலாளியம் தேசிய இனத் தாயகங்களைக் கலைத்து விட்டு அவற்றை வெறும் சந்தைத் திடலாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. முதலாளியத்திற்கு தேசிய இனம், தேசிய இனமொழி என்பவை ‘தடைக் கற்களாகவே’ தெரிகின்றன. முதலாளிகளுக்கு மக்கள் வெறும் வாடிக்கையாளர் கூட்டமாக இருந்தால் போதும். முதலாளியத் தேர்தல் கட்சிகளுக்கு மக்கள் வெறும் வாக்காளர்களாக இருந்தால் போதும். இந்த வகையில் மக்கள் தேசிய இனம், தேசிய மொழி, தேசியத் தாயகம் கடந்த உதிரிக் கூட்டமாக இருப்பதையே முதலாளிகள் விரும்புகின்றனர்.

கையில் ஒரு கைபேசி, பையில் ஒரு கைபேசி, குடிசைக்குள் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி – இவைதான் வளர்ச்சியின் அடையாளமா? அந்தக் குடிசைக்குள் கழிவறை கிடையாது. சமையலறை கிடையாது. படுக்கையறை கிடையாது. மூன்று வேளை உணவு கிடையாது. விருந்தினர் வந்தால் எடுத்துப் போட இரண்டு நாற்காலி கிடையாது. இதுதான் வளர்ச்சியா?

வளர்ச்சி என்பது சமூகத்தில் சில செல்வந்தர்களின் செங்குத்தான வளர்ச்சி அன்று. சமூகம் முழுமையும் வளர்கின்ற கிடைநிலை வளர்ச்சியாகும். இயற்கைச் சமன்பாட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் சக மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் உணவு, உடை, உறையுள், சமூக உறவு ஆகியவற்றில் தன்னிறைவு காண்பதே மெய்யான வளர்ச்சியாகும்.

ஒரு சமூகத்தில் தன்தேவை நிறைவு என்ற அடிப்படையில் உற்பத்தியும் வழங்கலும் இருக்கும்போதுதான் இந்த வளர்ச்சி ஏற்படும். முதன்மையாக இலாப நோக்கு, வெளிநாட்டு வணிகம் போன்றவற்றை இலக்காகக் கொண்டு உற்பத்தியும் வழங்கலும் நடைபெறும் போது செங்குத்தான வளர்ச்சிதான் ஏற்படும்.

அதனால் இயற்கைச் சமன்பாடும் சுற்றுச் சூழலும் சக மனிதர்களும் பாதிக்கப்படவே செய்வர். முதலாளியத்தின் இருப்பு தனிநபர் இலாப வெறியில் உள்ளது. அது சமூக உறுப்பினர்களையும் தன்னைப் போலவே உதிரிகளாக மாற்றியிருக்கிறது. ஒரு வேறுபாடு, அது தன் கையில் பெரும்பெரும் தொழில் வணிக நிறுவனங்களை வைத்துக் கொள்கிறது; சமூக உறுப்பினர்களை அந்நிறுவனங்களின் கூலிக்காரர்களாக ஆக்கிவிடுகிறது. அதை மூடி மறைப்பதற்காக குடிமக்கள் என்ற பட்டத்தைச் சூட்டி விடுகிறது. அதிலும் ஒரு மாற்றம் செய்து நுகர்வோர் குடிமக்கள் என்று அவர்களை வாடிக்கையாளர்களாக வகைப்படுத்தியுள்ளது.

இவ்வாறான முதலாளிய வளர்ச்சி குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைபாடு என்ன? உண்மையில் அது பாட்டாளி மக்களுக்கான கட்சிதானென்றால் முதலாளிய வளர்ச்சி முறையை மறுத்து சமூக வளர்ச்சி முறையை முன்மொழிய வேண்டும். அவ்வாறு சமூக வளர்ச்சி நோக்கில் சிந்தித்தால் தமிழ்நாட்டைத் துண்டு போடுவதை ஏற்காமல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கு உரிய தமிழ்த் தேசிய நிகரமை அரசியலை – பொருளியலை முன்வைக்க வேண்டும்.

அடுத்து, “மக்களுக்கு நெருக்கமாக நிர்வாகம் இருக்கவேண்டும். எனவே தமிழ்நாட்டைச் சிறுசிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் இராமதாசு. எல்லா அதிகாரங்களையும் எங்கோ இருக்கிற தில்லி குவித்து வைத்துள்ள ஏகாதிபத்திய நடுவத்திலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரத்தைப் பெறப் பாட்டாளி மக்கள் கட்சி என்ன கோரிக்கை வைத்திருக்கிறது? அதற்காக இதுவரை அக்கட்சி நடத்திய போராட்டங்கள் யாவை? நிர்வாகம் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமென்று மெய்யாகவே நினைத்தால் முதலில் கைவைக்க வேண்டிய இடம் தில்லி அதிகார மையமே.

அதை விடுத்து அதிகாரங்களையும் உரிமைகளையும் இழந்து புதிய காலனியாக ஆக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்குள் நிர்வாகத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு போவதாகச் சொல்வது வெறும் பசப்பல் ஆகும். தில்லி ஏகாதிபத்திய அதிகார மையத்தின் பா.ஜ.க. தலைமையிலும், காங்கிரஸ் தலைமையிலும் பங்கெடுத்த கட்சிதான் பா.ம.க. வருங்காலத்திலும் வாய்ப்புக் கிடைத்தால் அந்த அதிகார ஏகபோகத்தில் மூழ்கித் திளைக்கத் தயங்காத கட்சிதான் பா.ம.க. நகராட்சிக்குச் சற்று மேற்பட்ட அதிகாரம் படைத்த தமிழக மாநில நிர்வாகத்தைத் தமிழகத்தைத் துண்டாடுவதன் மூலம் மக்களுக்கு நெருக்கமாக்குவதாகச் சொல்வதில் எந்தத் தர்க்கமும் இல்லை; எந்த ஞாயமும் இல்லை.

நிர்வாகம் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதும் மக்களால் இயக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் முதன்மையான கொள்கைகளில் ஒன்று. அதை நிறைவேற்ற முதல் தேவை, தில்லி ஏகாதிபத்திய அதிகார மையத்திலிருந்து தமிழ்நாடு விடுதலை பெறுவதாகும். அடுத்து விடுதலை பெற்ற தமிழ்த் தேசக் குடியரசு, ஒரு கூட்டாட்சிக் குடியரசாகச் சீரமைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசக் கூட்டாட்சியில் தமிழகம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படலாம். 4 சட்ட மன்றங்கள் வைத்துக் கொள்ளலாம். தமிழ்த் தேசத்திற்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும்.

பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி உண்டாக்கிய வருவாய் மாவட்டங்கள் கலைக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியங்கள் அடிப்படை நிர்வாக அமைப்பாக மாற்றப்படும். அவை சிறு சட்டப்பேரவை போல் அதிகாரம் பெற்றிருக்கும். அதன் கீழ் ஊராட்சி மன்ற நிர்வாகம் மெய்யான மக்கள் நிர்வாகமாக இயங்கும். அதற்குரிய அதிகாரங்களை ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பெற்றிருக்கும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் கைதூக்கிகளாக இல்லாமல் சட்டம் இயற்றுவதுடன் அதைச் செயல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பும் உள்ளவர்களாக இருப்பர். இவ்வாறான தமிழ்த் தேசிய மக்கள் நிர்வாகம் குறித்து வேறொரு வாய்ப்பில் விரிவாகவும் நுணுக்கமாகவும் விளக்கலாம்.

மக்களுக்கு நெருக்கமாக நிர்வாகம் இருக்க வேண்டுமென்று கூறுகின்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மற்றும் மருத்துவர் சேதுராமன், பெஸ்ட் இராமசாமி ஆகியோர் தமிழகத்தைத் துண்டாடுவதைத் தவிர்த்து வேறு வகைத் திட்டங்கள் எதுவும் வைத்திருக்கிறார்களா? அவ்வாறிருந்தால் அதையும் அவர்கள் விளக்க வேண்டும்.

அடுத்து பெரும் எண்ணிக்கையிலுள்ள தங்கள் வகுப்பினர் முதலமைச்சர்களாக வரவேண்டும் என்று கருதினால் அதில் தவறு எதுவும் இல்லை. அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர்களாக வர உரிமையுடையவர்கள்தாம். அதற்காகத் தமிழ்நாட்டைத் துண்டு போட்டால், தங்களது அப்பத்தைச் சமமாகப் பங்கிட்டுத் தரும்படி குரங்கிடம் பஞ்சாயத்துக்குப் போன கதையாகிவிடும். அப்பத்தை இரண்டு துண்டாக்கிய குரங்கு, ஒன்று இன்னொன்றை விடக் கூடுதலாக இருப்பதாகச் சொல்லிச் சொல்லி அதைச் சமன்படுத்துவதற்காக அப்பத்தின் துண்டைச் சிறிது சிறிதாகப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டது. இப்படியாக இரண்டு துண்டுகளையும் குரங்கே சாப்பிட்டு விட்டது. அதைப் போல் இரண்டு துண்டுத் தமிழ் நாட்டின் உரிமைகளையும் அதிகாரங்களையும் தில்லி கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொள்ளும்.

அந்த நிலையில் முதலமைச்சராக இருப்பவருக்கு என்ன அதிகாரமும் உரிமையும் இருக்கப் போகிறது? அதைக் கொண்டு அந்த முதலமைச்சர் தன் வகுப்பு மக்களுக்கும் இதரத் தமிழ் மக்களுக்கும் என்ன வளர்ச்சியைக் கொடுக்க முடியும்? பிரித்தானியக் காலனி ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட சிற்றரசர்கள் தாங்கள் முடிசூட்டிக் கொள்ளலாமே தவிர மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முழு இறையாண்மையும் அதிகாரமும் பெற்றவர்களாக இல்லை. அதைப் போல் துண்டாகிப் போன தமிழ்ப் பகுதிகளின் முதலமைச்சர்கள் என்ற பட்டத்தைச் சுமக்கலாமே தவிர இப்போதுள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட இருக்காது.

இன்னொரு முகாமையான செய்தியை கவனிக்க வேண்டும். துண்டுபட்டுப் போன தமிழ் மாநிலங்களில் அயல் இனத்தார் வரத்து இன்னும் அதிகமாகும். அப்பொழுது மண்ணின் மக்களிடம் உருவான மாநிலக் கட்சிகளை அயலார் ஏற்க மாட்டார்கள். தங்கள் பணத்தைக் கொண்டு தமிழர் வாக்குகளையும் விலைக்கு வாங்கி காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தில்லி ஏகாதிபத்தியக் கட்சிகளையே மாநில ஆளுங்கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாகக் கொண்டு வருவார்கள்.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு இப்போதுள்ள புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம். அது தமிழர்களின் தாய் மண்ணாகும். அங்கு தமிழர்கள், குறிப்பாக வன்னிய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற போதும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. வன்னியர் அடித்தளத்தைக் கொண்டுள்ள பா.ம.க.வும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சட்டப் பேரவையில் கணிசமான இடங்களைக் கூட பா.ம.க.வால் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் வெளிமாநிலத்தவர் மிகையாகப் புதுச்சேரியில் குடியேறியதுதான்.

தமிழ்நாட்டைத் துண்டாடக் கோருவோர் அதைக் கைவிட்டு தில்லி ஏகாதிபத்திய நடுவத்தில் கட்டுண்டு கிடக்கும் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கப் போராடுமாறும், தமிழ் நாட்டுக்குள் உண்மையான சமூக வளர்ச்சியும் மக்களுக்கு நெருக்காமான நிர்வாகமும் கிடைக்கச் சரியான திட்டங்களை வைத்துப் போராடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஈழத்தில் வடக்கு கிழக்கு மாநிலங்களைத் தனித்தனியே பிரித்தது தவறு. அவற்றை ஒரே மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டைத் துண்டாட நினைப்பது முரண்பாடான நிலைபாடு என்பதை உணர்ந்து தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மொழிவாரி மாநிலப் பிரிப்பின் போது ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றிடம் தன்னுடைய தாயகப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது தமிழ்நாடு. இழந்த தமிழ்ப் பகுதிகள் சிலவற்றைத் தமிழகத்தின் வடக்கிலும் தெற்கிலும் மீட்பதற்காக சிறைப்பட்ட தமிழர்களை, சிறையில் உயிர் நீத்த தமிழர்களை, துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான தமிழர்களை, தடியடி பட்ட தமிழர்களை, சொத்துகளை இழந்த தமிழர்களை எண்ணிப் பார்த்து தமிழகத்தைத் துண்டாடும் கோரிக்கையை அவர்கள் கைவிட வேண்டும்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து தமிழகத்தைத் துண்டாட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்துத் தமிழர்களும் உறுதி பூண வேண்டும்.

அடுத்து இன்றைய அரசியல் கட்டமைப்புக்குள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியையும் சொந்தத் தாய் மண்ணாகக் கருதி சமமாக நடத்தி அதிகாரத்தில் சமபங்கு வகிக்கக் கூடிய புதிய நிலைமைகளைத் தோற்றுவிக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்.

- பெ.மணியரசன்

(இக்கட்டுரை தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஜனவரி 2010 இதழில் வெளியானது)

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

ஜனவரி 27, 2010

மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ (காட்டு வேட்டை).

சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களில் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக் கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரே ஹவுண்ட்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப் படைகளைச் சேர்ந்த ஒரு இலட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்திய இராணுவ ஹெலிகாப்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கைக் கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ. 7300 கோடி.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கார் அரசு உருவாக்கியிருக்கும் சல்வா ஜுடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 இலட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆபரேசன் கிரீன் ஹன்ட்- இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளைத் துறந்து ஓடுகிறார்கள். “இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார் சட்டிஸ்கார் மாநில டி.ஜி.பி விசுவரஞ்சன்.

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இதுதான். தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அற்புதமான அரிய கனிவளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமென்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா, குவார்ட்சைட் போன்ற 28 வகைக் கனிவளங்களும் காட்டு வளங்களும் நீர்வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தியத் தரகு முதலாளிகளும் இஷ்டம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள் மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலைவெறிக்குக் காரணம் இதுதான்!

ஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறு கட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெரிலைட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு 40 கி.மீ நீளமுள்ள நியாம்கிரி மலையைத் தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 இலட்சம் கோடி ரூபாய். இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் 7 சதவீதம். இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத் தாதுவில் 20% சட்டிஸ்கார் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாடா, எஸ்ஸார், ஜின்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத் தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத் தரவிருக்கும் விலை – டன்னுக்கு 27 ரூபாய். இவைபோல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள்!

பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலம் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10 இலட்சம் பழங்குடி மக்களும் விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாடா, பிர்லா, ஜின்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும், வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோ டின்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளைப் போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாடா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜின்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டி முடித்து விட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாடாவின் இரும்பாலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜின்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப்போர் உண்மையில் மக்களுக்கெதிரான போர்!

“நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டு சூழலை பெரிதும் பாதிக்கும் என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாடா, அம்பானி, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன் சிங் கூறும் செய்தி.

இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, இது மக்களுக்கு எதிரான போர்.

காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை. கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போரும் தொடுக்கும்.

பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டு சூழலை’ உருவாக்குவதற்காகத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹுண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணிநிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்துக்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம் – நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாக்கம்.

இந்த மறுகாலனியாதிக்க கொள்கை அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களைப் பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக்கொள்கின்றன.

“1994 இல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மய தாராளமயக் கொள்கையிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவவில்லை” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன் சிங்.

ஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாகியிருக்கிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதாரர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடீசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்துக்கும் அஞ்சாதவர்களாக – நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக் கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

எனவேதான்,”நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்” என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன் சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள்.தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்துவிட்டன.

அதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள விடாமல், ஓட்டுக்கு இலஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.

மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாக்கத் தாக்குதல்களால் வாழ்க்கை பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக் கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள் என்பதை அரசு அறிந்தே இருக்கிறது. இந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் நோக்கம் இதுதான்.

ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

ஜனவரி 27, 2010

உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலை ஒழித்தால்தான் தமிழ் சினிமா உருப்படும். எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு சம்பளம் தரலாம்’’ என அதிகாரப்பூர்வமாக ஒரு கூலிப்படையை உருவாக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். தனது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஜக்குபாய்க்கு நேர்ந்திருக்கும் கதி கண்டு உணர்ச்சிவசப்பட்டு சேரன் இவ்வாறு பேசிவிட்டார் என்று இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் காலம்தோறும் இப்படித்தான் பேசி வருகிறார். இப்படித்தான் பேசுவார். அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்? தன் உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் கூட தராத எத்தனையோ இயக்குநர்களின் பட்டியலில் சேரனின் பெயரும் இருக்கிறது.

இந்த ஜக்குபாய் பிரச்னைக்காக திரையுலகினர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கத்தில் நடத்தப்பட்டக் கூட்டத்துக்கு, பொதுவில் இம்மாதிரியான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வந்திடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் ‘‘ஜக்குபாய் கதையில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜக்குபாய் என்ற டைட்டிலிலேயே ஏதோ மிஸ்டேக் இருக்கிறது. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல மாதங்கள் டிஸ்கஸ் பண்ணியும் கதை நகரவே இல்லை. அதன்பிறகுதான் ஜக்குபாய் கதையில் சரத்குமார் நடித்தார். நமக்குதான் செட் ஆகவில்லை, சரத்குமாருக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் இப்போது பிரச்னை ஆகிவிட்டது’’ என்று சரத்குமார் தலையில் கூடுதலாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘சூப்பர் ஸ்டாரை அழைத்துப் பேச வைத்தால் விநியோகஸ்தர்களை சமாளித்து படத்தை விற்றுவிடலாம்’ என்று சுப்ரீம் ஸ்டார் கணக்குப் போட்டிருக்க, ரஜினியோ ‘டைட்டிலே வௌங்கலை. எவனோ பில்லி சூனியம் வெச்சுட்டான்’ என்று எக்ஸ்ட்ரா பஞ்சாயத்தை கூட்டினார். அதைத் தொடர்ந்த ரஜினிகாந்த்தின் பேச்சுதான் முக்கியமானது.

அவர் சொல்கிறார், ‘‘ஜக்குபாய்க்காக ‘Wasabi’ என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை கே.எஸ்.ரவிக்குமார் கொண்டுவந்து கொடுத்தார். படம் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. பத்து அலெக்ஸ் பாண்டியனுக்கு சமமான ஒரு ஓய்வு பெற்ற பெற்ற போலீஸ் அதிகாரியையும், அவருடைய மகளையும் பற்றிய கதை அது. அந்த போலீஸ் அதிகாரியின் மகள் வெளிநாட்டில் கோடீஸ்வரியாக இருக்கிறாள். அவளைப் பார்க்க அப்பா போகிறார். அந்த பெண்ணை சாகடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறது. அவர்களை அடித்து வீழ்த்தி மகளைஅந்த போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இது பிரமாதமான ஸ்க்ரிப்ட். நிச்சயம் வெற்றிபெறும். அதனால் இந்த வி.சி.டி. வெளியானதைப் பற்றி எல்லாம் சரத்குமார் கவலைப்படத் தேவையில்லை’’ என்று ரஜினிகாந்த் உள்ளது உள்ளபடியே போட்டுக்கொடுத்தார். ஒரு பிரெஞ்சு படத்தை அப்படியே திருடி தமிழில் எடுப்பது பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக ரஜினிகாந்த்தின் பேச்சைக் கருதலாம்.

அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.

மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?

கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.

ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.

அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.

ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.

ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

ஜனவரி 27, 2010

பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை (கற்பழிப்பு) வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளி 45 வயதுடையவன், காரோட்டும் பயிற்சி அளிக்கும் போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன். கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டான். காரணம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்டட அந்தப் பெண் சம்பவம் நடக்கும் போது இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாளாம். அதை அந்தப் பெண்ணின் அனுமதியில்லாமல் அகற்ற முடியாது என்பதால் நடந்தது கற்பழிப்பு இல்லை என விளக்கமளித்த நீதிமன்றம் மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு நடந்த உறவு என்று அவனை விடுதலையும் செய்தது.

கார்டியன் செய்தித்தாளில் ஜூலி பின்டல் எழுதிய கட்டுரையை ஜூலை மாதம் இந்து பேப்பர் வெளியிட்டிருந்தது. ஆணாதிக்கத்தின் திமிரோடு படு பிற்போக்காக தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம் பத்தாண்டுகள் கழித்து இப்போது அந்த விளக்கத்தை வேறு ஒரு வழக்கில் திருத்திவிட்டதாம். தனது கூட்டாளியின் பதினாறு வயது மகளைக் கற்பழிக்க முயன்ற கயவன் மேற்கண்ட இறுக்கமான ஜீன்சு பேண்டு விளக்கத்தை வைத்து வாதிட்டபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லையாம்.

இந்த சுயவிமரிசனத்தை எடுத்துக்கொள்வதற்கு பல போராட்டங்களும், பத்தாண்டு காலமும் ஆகியிருக்கிறது. பாலியல் வன்முறையின் பால் பல நீதிமன்றங்கள் உலகெங்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாளுவதாக ஜூலி குறிப்பிடுகிறார். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்திருக்கிறாள், எப்படி நடந்துகொள்கிறாள் என்பதெல்லாம் கற்பழிப்பு வழக்குகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் பல குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்கின்றனர். உலகெங்கும் பாலியல் வன்முறைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

தன்னை வல்லுறவுக்குள்ளாக்கிய அயோக்கியனை ஒரு பெண் பொது அரங்கில் தண்டிக்க நினைப்பதே அரிது. இந்தியா போன்ற நாடுகளில் அது இன்னமும் கடினமான ஒன்று. கற்பு, புனிதம் என்ற சங்கிலியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டவள் என்று நீதி கோரினாலே அவள் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. பார்ப்பனியத்தின் விழுமியங்களால் இயங்கிவரும் சமூகம் அவளை புனிதம் கெட்ட அபலையாகத்தான் பார்க்கிறது. தமிழ் சினிமாவில் கூட கற்பழித்தவனைக் காப்பாற்றுவதற்கு வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணிடன் அவன் எங்கே கை வைத்து என்ன செய்தான் என்று வாதிடும்போது, எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண் அழுது அரற்றுவாள். நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. சிதம்பரம் பத்மினி போன்ற வீரப் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை எதிர் கொண்டு நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். இவையெல்லாம் விதிவிலக்குகள்தான் என்ற போதும் சட்டமும், நீதிமன்றங்களும்கூட இதற்குத் தோதாகத்தான் இயங்குகின்றன என்பது முக்கியம்.

நீதிமன்றங்கள் மட்டுமல்ல கற்பழிப்புக்கு ஓரளவு பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பது உலகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது என்கிறார் ஜூலி. அம்னஸ்டி அமைப்பு சென்ற வருடம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பதிலளித்த கால்பங்கினர் கற்பழிப்புக்கு பகுதியளவோ, முழுமையாகவோ பெண்களும் செக்சியான உடை அணிவதின் மூலம் காரணமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தனராம். இதையே அயர்லாந்தில் நடந்த ஆய்விலும் நாற்பது சதவீதம் பேர் வழிமொழிந்திருக்கின்றனர்.

ஆண்களின் கற்பழிப்பு நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கருத்துக்கள் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு மட்டுமல்ல முன்னேறிய நாடுளுக்கும் சொந்தமாக இருக்கிறது. ஒரு பெண் உடை அணிவதன் மூலம் ஒரு ஆணை கற்பழிப்பு நடவடிக்கைக்கு ஈர்க்கிறாள் என்ற வாதம் உண்மையில் பெண்ணைத்தான் குற்றவாளி ஆக்குகிறது. தப்பு செய்யும் ஆண்களெல்லாம் சூழ்நிலையின் கைதிகளாக கருதப்படுகிறார்கள். இதுதான் உலகத்தின் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?

நைஜீரியாவில் ஒரு செனட்டர் ஒரு மசோதாவை முன்மொழிந்திருக்கிறாராம். அதன்படி ஒரு பெண் தனது அங்கங்கள் தெரியும் வண்ணம் உடையோ, குட்டைப் பாவாடையோ அணிந்து பொது இடத்தில் வலம் வந்தால் மூன்று மாதம் சிறை தண்டனையாம். இது அமலுக்கு வரும் பட்சத்தில் நைஜீரியாவின் சார்பில் ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகள் அனைவரும் குற்றவாளியாகி விடுவார்கள்! இதே போல போலந்திலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தெரு விபச்சாரத்தையும் கற்பழிப்புகளையும் குறைப்பதற்கு குட்டைப் பாவாடை அணிவதற்குத் தடை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறாராம். வடக்கு மலேசியாவில் ஒரு பழமைவாத நகரக் கவுன்சில் குதிகால் செருப்புக்களையும், கண்ணைப் பறிக்கும் உதட்டுச் சாயங்களையும் தடை செய்வதன் மூலம் கற்பழிப்புக்களையும், முறையற்ற பாலியல் உறவுகளையும் குறைக்க திட்டமிட்டிருக்கிறதாம்.

இந்த விசயத்தில் இசுலாமியவாதிகளை யாரும் மிஞ்ச முடியாது. ஒரு தண்டியான சாக்குப்பையை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு சுண்டுவிரலைக்கூட காட்டாமல் பெண்கள் நடமாடவேண்டும் என்பது அவர்கள் கருத்து. இதில் அனைவரும் தாலிபான்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களின் காமம் தலைவிரித்து ஆடுமாம். ஏன்தான் ஆண்களை அப்படி காமவெறி பிடித்தவர்களாக அல்லா படைத்தார் என்பது தெரியவில்லை.

இறுதியாக ஜூலி பின்டால் பெண்களைப் பற்றி புனையப்பட்டிருக்கும் இக்கருத்துக்களைச் சாடி ஒரு பெண் என்ன அணிவது என்பதை அவள் தீர்மானிக்கட்டும், அதை மற்றவர்கள் கட்டளையிடத் தேவையில்லை, ஒரு பெண் குடித்திருந்தாலும், குட்டைப் பாவாடை அணிந்திருந்தாலும் யாரும் அவளைக் கற்பழிக்க முடியாது, அப்படி நடந்து கொண்டால் அது குற்றமே, அதற்கு பெண்ணைக் காரணமாக சொல்வதை ஏற்கமுடியாது என்கிறார்.

உண்மைதான். ஒரு பெண் சாக்குத் துணியை மூடியிருந்தாலும், திறந்த மார்பகத்தோடு நடமாடினாலும் அவளைக் கற்பழிக்க முடிவெடுத்து விட்ட கயவர்களுக்கு உடை ஒன்றும் ஒரு பொருட்டல்ல. ஒரு பெண் தனியாக ஆள் நடமாற்ற பகுதியில் சிக்குவதுதான் அவர்களுக்குத் தேவையான ஒன்று. இதைக் கடுமையான சட்டத்தின் மூலமே தண்டிக்க முடியுமேயன்றி பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகிறார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது பெண்ணை அடிமையாகக் கருதும் வெளிப்படையான ஆணாதிக்கத் திமிராகும்.

ஆனால் ஜூலி பின்டாலின் கருத்தோடு கூடுதலாக நாம் சொல்வதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம, சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து ஒரு பெண் செல்வதற்கு காரணமென்ன? கணவனைக் கவருவதற்குத்தான். ஆனால் ஆண்கள் யாரும் பெண்களைக் கவருவதற்கு மல்லிகையைச் சூடுவதில்லை. தெருவோரம் நிற்கும் விலைமாது கூட இந்த அலங்காரங்களோடுதான் தனது வாடிக்கையாளரைக் கவருகிறாள். இவையின்றி அவளால் தொழிலைச் செய்ய முடியாது.

ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் பேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன? எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.

எல்லா விளம்பரங்களிலும், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட பெண் மாடல்கள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லா வழியிலும் அல்லும் பகலும் பெண்ணுடல் என்பது உலக முதலாளித்துவ நிறுவனங்களால் அன்றாடம் கற்பழிக்கப்படுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண் தனக்குரிய ஆடைகளை அணிவதற்கு சுதந்திரமில்லை. இதைப்பெறவேண்டுமானால் போகப்பொருளாகக் கருதி திணிக்கப்படும் இந்த அழகியல் பொருட்களை மறுக்க வேண்டும். இவற்றைத் துறப்பதில்தான் பெண்ணழகு உண்மையாக மலர முடியும். ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை.

லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!

ஜனவரி 27, 2010

நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும்.

1.முதல் கவிதை:
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்

என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
——————————
2. இரண்டாவது கவிதை:

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-லீனா மணிமேகலை

கவிதை எழுதியோ, கோட்ம்பாக்கத்தில் புகுந்தோ, என்ன செய்தாவது எப்படியாவது பிரபலமாக விரும்பும் லீனா மணிமேகலை என்னும் பெண் இப்படியான இரண்டு கவிதைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார். அந்தக் கவிதை சொல்ல வருகிற கருத்து அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி இதுதான். மத்திய கிழக்கில் அமெரிக்கா வீசிக் கொண்டிருக்கும் குண்டுகளுக்கும்., வன்னியில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய கொலைகளுக்கும், ஆபகானில், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இன்னும் இன்னும் உலகில் ஏகாதிபத்தியங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போர்களுக்கும் இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண் குறியின் வெறி….. தவிரவும் மதவாதிகள், பாசிஸ்டுகள், உழைக்கும் ஏழை மக்கள், புரட்சிகர சக்திகள், என எல்லோரையும் ஒரே கூண்டில் அடைத்து அத்தனை பேரையும் ஆண்குறியின் வடிவமாகக் காணும் மணிமேகலை, மயங்கி மல்லாந்து கிடந்தபடியே காறித்துப்புகிறார். கவிதை தெறிக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு தமிழில் பாலியல் கவிதைகளை பெண்கள் எழுதுவதில்லை என்ற மனக்குறையை சிலஅறிவுஜீவிகள் வெளியிட்டிருந்தனர். 60, 70 களில் சரோஜாதேவி என்ற பெயரில் பலான இலக்கியங்களைப் படைத்து வந்த படைப்பாளி ஒரு ஆணாகத்தான் இருக்கமுடியும் என்று உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவை அப்போது அறிமுகமாகவில்லை என்பது மட்டுமல்ல, இந்த அறிவுஜீவிகளும் அப்போது ( நடுத்தர) வயதுக்கு வரவில்லை. பிறகு ஐரோப்பிய கலகத் தத்துவங்களால் கிளர்ச்சியூட்டப்பட்ட நடுத்தரவர்க்க கலகக் காரர்களின் குழு “பலான கதைகளையும் கவிதைகளையும் பெண்களே எழுதினால் எப்படி இருக்கும் என்று தங்களது நடுத்தர வயதில் ஆசைப்பட்டது. இந்த எழுத்தியக்கத்தையும் தொடங்கி வைத்தது. தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள வேறெந்த தனித்திறமையும் வாய்க்கப்பெறாத, மாதர்குல மாணிக்கங்களில் சிலர், புணர்ச்சி இலக்கியம் என்ற இந்தப் புதிய ஜெனரை (Genre) படைக்கத் தொடங்கினர்.

தனியார்மயப் புரட்சி, நுகர்வியப் புரட்சி, பாலியல் புரட்சி ஆகிய புரட்சிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து அட்டைப்படத்தில் செய்துவரும் இந்தியா டுடே எனும் பூணூல் அணியாத என்.ஆர்.ஐ இந்து தேசியப்பத்திரிகை, இத்தகைய கவிதாயினிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவே, லீனா மணிமேகலை போன்றோர் ஆடத்தொடங்கினர். மேலை நாடுகளில் கால்பந்து ஆட்டத்தின் நடுவே ஆடையை அவிழ்த்துப் போட்டு ஓடி, கலகம் செய்து, பிரபலமாகும் பரிதாபத்துக்குரிய பைத்தியங்கைப் போல, ஆணுறுப்பு, பெண் உறுப்பு போன்றவற்றை ‘பச்சையாக’ எழுதுவதனால் உலகமே தங்களையும் தங்கள் எழுத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போல இவர்கள் கற்பித்துக் கொண்டனர். இதற்கு ஆமாம் போடுவதற்கு சில பன்னாடைகள். இந்த நவீன ரசனைக்கு ஒரு ரசிகர் கூட்டம். இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.

லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும் ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.

பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு” தீனி போடுவதுதான் லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்.

லீனா எழுதியுள்ள இந்தக் கவிதையை ஓபாமாவோ, கொலைகாரன் ராஜபட்சேவோ பார்த்தால் லீனாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அப்படியே ஆண்குறி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஒரு மில்லியன் டாலரும் கூட கொடுக்கலாம். காரணம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பயங்கரவாதம் உலகெங்கும் நடத்தும் ரத்த வெறியாட்டத்தை அந்த ரத்தக் குளியலில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைகளை, வன்னியில் கொல்லப்பட்ட ஐமப்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களின் படுகொலையை மறைத்து அப்படுகொலைகளை ஆப்ட்ரால் ஒரு ஆண் குறி பிரச்சனை என்று எழுதும் லீனாவை ராஜபட்சேவும், ஓபாமாவும் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியோடு கட்டுரையைத் துவங்குகிறோம்.

ஆண்குறி கவிதைகள் போக லீனா தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தோம். அவர் செங்கடல் என்றொரு ஆவணப்படமோ, திரைப்படமோ எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தப் படப்பிலில் கலந்து கொள்ள இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி ராமேஸ்வரம் வந்திருப்பதாகவும், செங்கடல் குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக ராமேஸ்வரத்தில் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில்தான் தமிழ் மக்களின் ஆண் குறியான தினத்தந்தி நாளிதழில் அந்தச் செய்தியை படிக்க நேர்ந்தது. செய்தி இதுதான். வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல நாள் ஊதியத்தை கொடுக்க மறுத்த லீனா தலைமையிலான படப்பிடிப்புக் குழுவினரிடம் தொழிலாளர்கள் ஊதியம் கேட்ட போது அவர்களை அலைக்கழித்தார்களாம். வெறுத்துப் போன தொழிலாளர்கள் படம் பிடித்த ஒளிச்சுருளை அல்லது டேப்பை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிய போது படப்பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு லீனா மணிமேகலை, ஷோபா சக்தி ஆகியோரும் சேர்ந்து அவர்களை தாக்கினார்களாம். கடைசியில் அடிவாங்கியவர்கள் போலீசுக்குப் போக, போலீசும் அடித்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறது.

உடனே லீனா போலீசிடம் சீறிப்பாய்ந்ததாகவும் அப்படிச் சீறியதை படம் பிடித்த காவல்துறையினரை லீனா தள்ளி விட்டதாகவும் கடைசியில் ஷோபா சக்தி, லீனா ஆகியோர் ஸ்டேசனில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்து விட்டதாகவும் நாம் அறிய முடிகிறது. காவல் நிலையத்தில் மட்டுமல்ல பல இடங்களில் தனது முற்போக்கு முகத்தை காட்ட அஞ்சாதவர் லீனா மணிமேகலை.

ஒரு முறை லயோலாக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு சென்ற அவரை மறித்தது ஒரு கிறிஸ்தவ ஆண் குறி. தன்னை மறித்து நின்ற அந்த ஆண் குறிக்கு எதிராக சினந்து வெடித்தார் லீனா. அதையும் உலக மகா பிரச்சினையாக அதாவது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரித்தார் லீனா. அப்போது அவர் காட்டிய ஆவேச எழுச்சிக்கு நிகராக இராமநாராயணன் படங்களில் வரும் அம்மன்களின் வேப்பிலை ஆட்டத்தை மட்டுமே ஒப்பிடமுடியும்.

பல பதிவர்கள், வேலையில்லாத முற்போக்குவாதிகள், விளம்பரங்களுக்காக வேடம்போடும் பெண்ணியவாதிகள் அனைவரும் லீனாவுக்காக திரண்டு வந்தனர். ‘அற்பமான’ உலக அரசியல் பிரச்சினைகளுக்காக சினமடையாதவர்கள் இந்த ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் பிரச்சினைக்காக ஆர்ப்பரித்தது ‘நல்ல’ விசயம்தான். இருக்கட்டும். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கவிதைக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார் லீனா. ( சுகன் வந்து இலங்கை தேசிய கீதம் பாடினார் அல்லவா? அந்த கூட்டம்தான்) அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட இடம் – முன்னர் லீனாவை கிறிஸ்தவ ஆண் குறி ஒன்று மறித்து நின்ற அதே இடம்தான்.அந்த கிறித்தவ ஆண்குறிக்கு நேர்ந்த கதி சுகனுக்கு நேரவில்லை. இலங்கை தேசிய கீதத்தில் அத்தகைய ‘குறி’யீடுகள் எதுவும் அவருக்கு தெரியவில்லை போலும்!

சரி லீனாவின் தாக்குதலுக்கு ஆளான சினிமாத் தொழிலாளிகளுடைய கோடம்பாக்கத்துக்கு வருவோம். சினிமாத் தொழிற்சாலையை (இது தொழிற்சாலையா என்பது வேறு விசயம்) கனவுத் தொழிற்சாலை என்பார்கள். சினிமாக்கனவுகளோடு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை மென்று துப்பும் தொழிற்சாலை என்பதனால் இப்படி சொல்ல்லாம். அல்லது கற்பனைக் குதிரையில் இரசிகர்களை ஏற்றி விட்டு, தான் மட்டும் காசில் குறியாக இருக்கும் கயமை காரணமாகவும் இந்தப் பெயர் வாய்த்திருக்கலாம். இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு ஆண் குறி உண்டா, அல்லது தொழிற்சாலையே ஒரு ஆண்குறிதானா என்பது லீனாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கனவுத் தொழிற்சாலையை இயக்குவது 24 சங்கங்கள் என்று சொல்வதை விட 24 துறைகள் என்று சொல்லலாம். இந்த 24 துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக முடியும்.இயக்குநர், கேமிராமேன், டச்சப் பாய், மேக்கப்மேன், டான்ஸ் மாஸ்டர், சாப்பாடு பரிமாறுகிறவர்கள், லைட்ஸ் மேன், புகை போடுகிறவர்கள், மழை பெய்ய வைப்பவர்கள், வெடி குண்டுகள் வைப்பவர்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை. இந்த வெவ்வேறு துறைகளுக்கும் தனித்தனி சங்கங்களும் உண்டு. ஏ.வி. எம். களும், ஷங்கர்களும், ரஜினிகாந்துகளும், கமலஹாசன்களும் தமிழ் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கோலோச்சும் இந்தத் துறையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று ஒரு பிரிவினரும் உண்டு. சினிமாவில் கதாநாயகியாகும் கனவுகளோடு வந்து அந்த ஆசைகளாலேயே தூண்டிலில் சிக்கிய புழுக்களாக மாறி, ஆண் குறிகளால் எளிதில் சூறையாடப்பட்டு கடைசியில் இரவு நேர பாலியல் தொழிலாளிகளாக காலத்தை கழிக்கிறவர்கள்தான் இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களில் 95% பேர் பெண்கள்.

இவர்கள் லீனாவைப் போன்று கவிதைகளில் கற்பனையான ஆண்குறிகளை கட்டமைக்கும் வாய்ப்பு பெற்றவர்களல்லர். மாறாக ஆண் குறியின் கோரத்தை ஒவ்வொரு இரவிலும் அனுபவித்து அன்றாடம் கோடம்பாக்கத்தில் தங்களின் உதிரத்தை இழந்து நாற்பது வயதுக்குள்ளாகவே வனப்புகளை இழந்து வாழ்விழ்ந்து கடைசியில் பிச்சைக்காரிகளாகவும், மன நோயாளிகளாகவும், லீனாவின் மொழியில் சொன்னால் செக்ஸ் தொழிலாளிகளாகவும் மாறிப் போகிற பரிதாபப் பெண்கள் இவர்கள்.

இவர்களைப் போன்றே இன்னொரு வகையினரும் உண்டு. இவர்கள் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். 95% பேர் ஆண்கள். ஆமாம் லீனாவின் மொழியில் சொன்னால் ஆண் குறிகள். இவர்களின் ஊதியங்களை ஒழுங்கு செய்யும் விதமாக எந்த விதமான யூனியன்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்காக இருக்கிற யூனியன்கள் பெரிய தலைகளின் அல்லக்கை யூனியன்களாக மட்டுமே செய்லபடும். பெரும்பலான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் தமது உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. உதவி இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒரே வருமானம் பேட்டா. ஆமாம், அதுவும் ஷூட்டிங் நடக்கிற நாட்களில் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்த பிறகு கடைசியாய் வழங்குவார்கள். அந்த பேட்டாவுக்காக அந்த ஆண் குறிகள் காத்திருப்பார்கள். வறுமை, மரியாதையின்மை, வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அவமானம் என பல அவமானங்களைச் சுமந்தே ஒவ்வொரு உதவி இயக்குநரும் உருவாகி கடைசியில் ஒரு ‘ தமிழ் ஆண் குறி’ சினிமாவைப் படைக்க முடியும்.

லீனா சென்னை வந்த உடன் இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம் போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….

யோனிகளை சென்டிமெண்டில் ஆழ்த்தி அடிமைப்படுத்தும் பாரதி ராஜா, சேரன் முதலானவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதில் லீனாவுக்கு வருத்தம் இல்லை. அத்துடன் தமிழக யோனிகள் அத்தனையையும் கண்ணீர் சிந்தவைக்கும் சீரியல் இயக்குநரை கை பிடித்ததிலும் அவருக்குப் பிரச்சினையில்லை. உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் ஆண் குறி ஒன்றே காரணம் என்று எழுதும் லீனாவுக்கு தனது ‘செங்கடல்’ படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் பேட்டா கேட்டவுடன் ஆண் குறிகளே தன்னிடம் வந்து பேட்டா கேட்டது போல் தோன்றியிருக்கும்.

இனி, செங்கடல் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம். ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம். சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம். நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

சரி இதை இத்தோடு விட்டு விட்டு லீனாவிடமே வருவோம்.

இதற்கு முன்னரும் லீனா மாத்தம்மா, தேவதை, உள்ளிட்ட சில ஆவணப் படங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எடுத்திருக்கிறார். இந்தப்படங்கள் கிறிஸ்தவப் பாதிரிகள், தன்னார்வக்குழுக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தன்னார்வக்குழுக்களிடம் பொறுக்கித் தின்னும் பன்னாடைகளும் லீனாவின் ஆண்குறி லிஸ்டில் வரவில்லை. மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லீனா எடுத்த படங்கள் உழைக்கும் மக்கள் தொடர்பானது. அதில் எவ்விதமான யோனி அரசியலையும் நாம் காணவில்லை. தேவதைகள் என்றொரு படம் எடுத்திருந்தார். அதில் உழைக்கும் பெண்களை வைத்து fantasy பண்ணியிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் சந்திக்கும் ஆண் குறிகள் பற்றியும் அக்கறைப்படவில்லை.அரசியல் பற்றியும் அக்கறைப்பட வில்லை. ஒரே அக்கறை பணம் பணம் பணம் மட்டுமே…..

எப்போதும் ஆண் குறியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அலையும் ஒரு ஈழத்து எழுத்தாளருடனும் லீனா சினிமா முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.

இராமேஸ்வரம் பிரச்சினையில் போலீஸ் கையில் இருந்த கேமிரா மொபைலை பிடுங்கிய லீனாவின் ‘தைரியத்தை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். எனினும் அந்த காக்கி ஆண் குறிகளுக்கு எதிராக போராடிய லீனா போலீசிடம் இருந்து தன் போர்க்குணத்தால் விடுபட்டார் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது. போலீசிடம் மாட்டிக் கொண்ட ஷோபா சக்தியும், லீனாவும் வெளியில் வர நம்பியது ஒரு அதிகார ஆண் குறியை,,,, ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனின் கண் எதிரிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினியின் கதை, கடைசியில் கணவனைக் கொன்று விட்டு, பத்மினியை வேட்டையாடின காவல் நாய்கள். அந்தியூர் விஜாயாவையும் நீங்கள் மற்ந்திருக்க முடியாது. வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்றவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தார்கள் காவல்நாய்கள். வாச்சாத்தி, விழுப்புரம், சென்னை என்று ஊர் ஊருக்கும் காக்கி ஆண் குறிகள் குதறிய கதைகள் உண்டு. ஆனால் அந்த காவல்நாய்களையே எதிர்த்து நிற்கிற லீனாவின் துணிச்சல், ஆண் குறிகளின் வக்கிரங்களுக்கு பலியான ஏனைய பெண்களுக்கு ஏன் வரவில்லை? லீனாவிடம் இருப்பது துணிச்சலா, அல்லது அதிகார பீட ஆண்குறிகளுடனான தொடர்பு தரும் திமிரா என்பதுதான் நமது கேள்வி. சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட புவனேசுவரியும் லீனாவைப் போன்றே போலீசை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. புவனேசுவரிக்கு ஏதாவது பிளாக் இருக்கிறதா, அவர் கவிதை எழுதுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். பதிவர்கள் தெரிவித்தால், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி லீனாவின் ஈழப் போராட்ட முகங்கள்…..

போருக்கு எதிராக புதிய அமைப்புத் தொடங்கி டில்லி வரை சென்று போராடியவர் லீனா. சென்னையில் கவிஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தியவர் லீனா. இதெல்லாம் ஈழத்து ஆர்வலர்களிடம் லீனா பற்றி உருவாகியிருக்கும் பிம்பங்கள். இந்த பிம்பங்களை வைத்து லீனா தனது இமேஜை கூட்டிக்கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதனால்தான் டெல்லி போராட்டத்திற்குச் சென்று வந்தவுடன், தானே முன்னின்று அப்போராட்டத்தை நடத்தியது போன்ற பேட்டிகளைக் கொடுத்தார். விளைவு – அவரது இலக்கிய நண்பர்களும், பெண்ணியவாதிகளும் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

ஈழத்திற்கான கடற்கரைப் போராட்டம் ஆர்ப்பட்டமாகத் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் லீனாவின் மகா யோக்கியத்தனம் தெரிந்தது. பேச்சாளர் ஒருவர் போருக்கு துணைபோன யுத்தக் குற்றவாளி சோனியா காந்தி பற்றி பேசத் தொடங்கினார். மைக்கைப் பிடித்த லீனா “யாரும் இங்கே மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து பேசக் கூடாது” என்று நிபந்தனை போட்டார்.இது யோனிக்கு யோனி செய்யும் உதவி. இதில் ஆண்குறிக்கு தொடர்பில்லை போலும்!

அடுத்து வந்தவர், சரி மத்திய மாநில அரசுகளைத் தானே திட்டக் கூடாது, குறைந்த பட்சம் நமது கோபத்தை ராஜபட்சே மீதாவது காட்டுவோம் என்று ராஜபட்சே பற்றி பேசத் தொடங்கினார். உடனே தலையிட்ட லீனா “இங்கே யார் மனமும் புண்படாமல் பேசுங்கள், யார் மனமும் புண் படாமல் போராடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது. ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத் தெரிந்த பலருக்கும்….. கடைசியாக இராஜபக்சேவுக்கும் ஆண் குறி கிடையாது போலிருக்கிறது. இல்லையென்றால் லீனா சும்மா விட்டு விடுவாரா? இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம். இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

பொதுவாக போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில் இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.

எதுவும் கேட்கவில்லை. சும்மா பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்களா? கேட்டால்தான் பிரச்சினை, பார்த்தால் பிரச்சினையே கிடையாது. …. பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

ஜனவரி 27, 2010

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை!

பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.

தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.

கோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன்னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி ‘அறங்கள்’ அத்தனைக்கும் தாங்களே ‘பரம்பரை அறங்காவலர்கள்’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

மேற்படி சொத்துக்களுக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடும் தீட்சிதர்களிடம் அதற்கான பட்டாவோ, பத்திரமோ, பகவான் எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னியோ கிடையாது. எனினும் இந்த லவுகீக உடைமைகள் அனைத்தும் தங்களுடையவை என்பது அவர்களுடைய ‘ஆன்மீக நம்பிக்கை’யாக இருக்கிறது.

நடராசனின் ஆக்ஞைப்படி 3000 தீட்சிதர்கள் கைலாசகிரியிலிருந்து கிளம்பி சிதம்பரம் வந்ததாகவும், ஊர் வந்து சேர்ந்தபின் தலையை எண்ணிப்பார்த்தபோது, 2999 தீட்சிதர்கள் மட்டுமே இருந்ததாகவும், “காணாமல் போன அந்த ஒரு தீட்சிதன் நானே” என்று நடராசப் பெருமானே அறிவித்ததாகவும் ஒரு கதையை தீட்சிதர்கள் சொல்கிறார்கள். இந்தக் கதைப்படி தில்லை நடராசனும் ஒரு தீட்சிதனாகி விடுகிறான். எனவே, தீட்சிதர்களால், தீட்சிதர்களுக்காகப் பராமரிக்கப்படும் தீட்சிதருடைய கோவிலே தில்லைக் கோயில் என்று ஆகிறது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள லவுகீக சொத்துக்களுக்கு மத நம்பிக்கையின் பெயரால் ஒருவர் உரிமை கோர முடியுமா, சட்டம் இதை அனுமதிக்குமா என்று நீங்கள் சிரிக்கலாம். ஒரு இந்தியக் குடிமகன் மதத்தை நம்புவதற்கும், கடைப்பிடிப்பதற்கும் உரிமை வழங்குகின்ற இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25, 26 இன் கீழ்தான் இந்த பாரம்பரிய உரிமையை இத்தனை காலமும் தீட்சிதர்கள் நிலைநாட்டி வந்திருக்கிறார்கள். இப்போதும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ்தான் தமிழக அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இது தில்லைச் சிதம்பரத்தின் கதை.

இனி தில்லி சிதம்பரத்திடம் வருவோம். சிதம்பரத்தின் காட்டு வேட்டைப் படைகள் கைப்பற்றத் துடிக்கும் முதல் இடம் ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலை. இந்த நியாம்கிரி மலையின் பாரம்பரியக் காவலர்கள் டோங்கிரியா கோண்டு என்ற இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். டோங்கர் என்ற ஒரியச் சொல்லுக்கு மலை என்று பொருள். அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் கற்களும்கூட கோண்டலைட் கற்கள் என்றே அழைக்கப்படுவது இம்மக்களுடைய பாரம்பரிய உரிமைக்கான ‘கல்வெட்டு’ ஆதாரம்.

எனினும் அம்மக்கள் தம்மை ‘ஜார்னியாக்கள்’ என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த மலைகளில் நிறைந்திருக்கும் வற்றாத நீர்ச்சுனைகளே (ஜரனா) தங்கள் வாழ்வின் ஆதாரம் என்பதனால், தங்களை அந்த நீர்ச்சுனைகளின் புதல்வர்களாகவே அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். பூமித்தேவனும் (தரணி பெனு) நியாம் தேவனும் (நியாம் பெனு) தான் இம்மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்.

நியாம்கிரி மலை இம்மக்களுடைய உடலின் நீட்சி. தம் சொந்தக் கைகளுக்கும் கால்களுக்கும் யாரும் பத்திரப் பதிவு செய்து வைத்துக் கொள்வதில்லை என்பதால், தங்கள் மலைக்கும் இவர்கள் பட்டாவோ பத்திரமோ வைத்திருக்கவில்லை. அந்த மலை அவர்களால் பேணப்படும் உடல், அந்த மலைதான் அவர்களுக்குச் சோறு போடும் பொருள், அந்த மலையேதான் அவர்களது வழிபாட்டுக்குரிய ஆவி.

தங்களது பொருளாயத உரிமைகளையும், ஆன்மீக உரிமைகளையும் பிரித்துப் பார்ப்பதற்கோ, இந்திய அரசியல் சட்டத்தின் எந்ததெந்தப் பிரிவுகள் எவற்றைப் பாதுகாக்கின்றன என்று தீட்சிதர்களைப் போல, விவரமாக தெரிந்து வைத்திருப்பதற்கோ அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டதில்லை. சொல்லப் போனால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம்தான் தங்களைப் ‘பாதுகாத்துக் கொண்டிருக்கிறது’ என்ற உண்மையே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் புல்டோசர்கள் நியாம்கிரி மலைக்கு விஜயம் செய்யும் வரை.

இது உலகமயமாக்கலின் காலமல்லவா? இம்மண்ணின் பூர்வகுடிகளை விடவும், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களுக்குத் தாய்நாட்டுப் பாசம் தலைவிரித்து ஆடும் காலமல்லவா? லண்டனில் குடியேறிய இந்தியரான அனில் அகர்வால் என்ற உலகப்பணக்காரரும் நியாம்கிரி மலையில் தனது கடவுளைத் தரிசித்து விட்டார்.

பருவமழையின் நீரைப் பருகி, கடற்பஞ்சு போல அதனைச் சேமித்து வைத்து, அச்சேமிப்பில் விளைந்த அடர்ந்த காடுகளை ஆகாயத்தில் கரங்களாய் நீட்டி, மேகத்தின் நீரை மண்ணில் இறக்கி, வற்றாத அருவிகளையும், சுனைகளையும் வழங்கிய வண்ணம் அந்த மலைக்குள் மறைந்திருக்கும் கடவுள் யாராக இருக்கும் என்ற அவரது ஆன்மீகத் தேடலுக்கு அறிவியல் அளித்த விடை பாக்சைட். இந்தக் கடவுளின் அறங்காவலராக உடனே பொறுப்பேற்க விரும்புகிறார் அகர்வால்.

தங்களது கடவுளான நியாம்கிரி மலைக்கு ஆடு கோழி அறுத்து பலியிடுவது டோங்கிரியா கோண்டு இன மக்களின் வழிபாட்டு முறை. கடவுளைத் தனக்குப் பலியிட்டுக் கொள்வது அகர்வாலின் வழிபாட்டு முறை. மலையின் மேற்பரப்பில் நிரம்பியிருக்கும் பாக்சைட் தாதுவுக்காக, அந்த 40 கி.மீ. நீள மலைத் தொடரின் தலையை மட்டும் அவர் சீவ விரும்புகிறார். பழங்குடி மக்களின் கடவுளரைத் தின்று செரிக்கும் இந்த வழிபாட்டு முறைக்குப் பொருத்தமான ஒரு பெயரை, அவர் தன்னுடைய நிறுவனத்திற்கு ஏற்கெனவே சூட்டியிருக்கிறார் ‘வேதாந்தா மைனிங் கார்ப்பரேசன்.’ இதனைத் தற்செயல் என்பதா, இறைவன் செயல் என்பதா?

வேதங்களின் அந்தமாக ஆதிசங்கரன் கண்டறிந்த தத்துவம் ‘அகம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மமாக இருக்கிறேன்). எனினும் நாம் காணும் இந்தப் பிரம்மம், எல்லைகள் கடந்த என்.ஆர்.ஐ பிரம்மம். மூலதனம் என்ற பெயரால் அழைக்கப்படும் பிரம்மம்.

‘பிரம்மம் சத்யம், ஜெகன் மித்யா’! “பிரம்மமே மட்டுமே உண்மையானது, உலகம் என்பது வெறும் மாயத்தோற்றம்” என்பது சங்கரனின் தத்துவ விளக்கம். இந்த விளக்கத்தை மூலதனத்தின் மொழிக்குப் பெயர்த்தோமாகில், நாம் காணும் புதிர்கள் யாவும் நொடியில் விலகுகின்றன. இல்லாத மாயைகளான வீடுகளின் மீது, எழுதிக்கொடுக்கப்பட்ட பத்திரங்களே சத்தியமாக மாறியதும், பின்னர் அந்த அசத்தியங்களைச் சத்தியமாக மாற்றும் முயற்சியில் இந்த மாய உலகம் இன்னமும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதும் ஆதிசங்கரனின் தியரியை நிரூபிக்கவில்லையா என்ன?

நியாம்கிரியின் தலையில் நிறைந்திருக்கும் அடர்ந்த காடுகளை அழிக்க சுற்றுச்சூழல் சட்டம் தடையை ஏற்படுத்தியதால், உலகப்புகழ் பெற்ற அத்வைதிகளான ஜே.பி. மார்கன் நிறுவனத்தினரை வைத்து, நியாம்கிரியில் ‘இருக்கின்ற காட்டை இல்லை’ என்று எழுதி வாங்கினார் அகர்வால். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை!

அடுத்த தடை, பழங்குடி மக்களின் நிலத்தை நேரடியாகப் பன்னாட்டு நிறுவனத்துக்கு எழுதிவைக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தோற்றுவித்த இடையூறு. அட்டவணையையே நீக்குவதற்கு அவகாசம் தேவையென்பதால், தனது இந்திய அவதாரமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பெயரில் சுரங்கம் தோண்டுவதாக அறிவித்தார் அகர்வால். ஆமோதித்தது உச்சநீதிமன்றம்.

காடுகளை அழித்து சுரங்கம் தோண்டினால், சூழலியல் பேரழிவு நிகழும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவே ஆட்சேபித்தது. “காடுதானே, புதிதாக வளர்த்துக் கொள்ளலாம்” என்று அந்த ஆட்சேபத்தையும் ஒதுக்கி விட்டு, 200 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்சைட் தாதுவைத் தன்னகத்தே வைத்திருக்கும் நியாம்கிரி மலையை அகர்வாலுக்கு வழங்குவதாக, ஆகஸ்டு 2008இல் தீர்ப்பளித்து விட்டது, கே.ஜி.பாலகிருஷ்ணன், அஜித் பசாயத், கபாடியா என்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு.

வனவிலங்குகளைப் பராமரிக்க 105 கோடி, பழங்குடி மக்களை முன்னேற்றுவதற்கு 12.2 கோடி, பழங்குடி மக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகளை பராமரிக்க அகர்வாலின் இலாபத்தில் 5 சதவீதம் நியாம்கிரியின் தலையைச் சீவும் பாவத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள பரிகாரம் இது. கொலைக்குற்றத்துக்குப் பரிகாரமாக கோயிலுக்கு நெய்விளக்கு! இவ்வளவு மலிவானதொரு பரிகாரத்தை ஒரு பார்ப்பனப் புரோகிதனின் வாயிலிருந்து கூட யாரும் வரவழைத்திருக்க முடியாது.

“அப்பழங்குடி மக்களால் கடவுளாக வழிபடப்படும் மலையைத் தகர்ப்பது, அவர்களது மத நம்பிக்கையையே தகர்ப்பதாகும்” என்ற வாதத்தை நீதிபதிகளின் அறிவியல் உணர்ச்சியால் அங்கீகரிக்க இயலவில்லை. வளர்ச்சித் திட்டத்துக்கும் வல்லரசாவதற்கும் தடையாக ஈசனே வந்து நிற்பினும், குற்றம் குற்றமே என்றுரைக்கும் நக்கீரன் பரம்பரையல்லவா, நம் நீதிபதிகள்!

இருப்பினும், அந்தக் கடவுள் எந்தக் கடவுள், அந்த நம்பிக்கை யாருடைய நம்பிக்கை என்பதைப் பொருத்தும் நாட்டாமையின் தீர்ப்பு வேறுபடுகிறது. மரகதமலையாக ஒளிரும் நியாம்கிரி மலையைக் காட்டிலும், யாருக்கும் உதவாத ராமேசுவரத்தின் மணல்திட்டுகளை உச்சநீதிமன்றம் புனிதமாகக் கருதியதென்றால் அதற்குக் காரணம், அந்த நம்பிக்கை ஸ்ரீராமபிரான் தொடர்பானது என்பதுதான். நியாம்கிரி தொடர்பான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்ட பழங்குடி மக்களிடம் “உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டார்கள் நீதிபதிகள். ஆனால் இந்தக் கேள்வியை சிதம்பரம் வழக்கில் தலையிட்ட சுப்பிரமணியசாமியிடம் நீதிபதிகள் கேட்கவில்லை.

அதுமட்டுமல்ல, புனிதமான கைலாசத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தீட்சிதர்கள் சொல்லிவரும் கதையை எந்த நீதிமன்றமும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில்லை. வெள்ளைக்காரன் காலம் தொட்டு எல்லா நீதிமன்றங்களும் அந்தக் கதையைக் கேட்டுத்தான் தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதி வருகின்றன. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் தாழ்வாரங்களில் தில்லை தீட்சிதர்கள் நம்பிக்கையுடன் உலவுகிறார்கள். நியாம்கிரி பழங்குடிகளோ, தங்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தங்கள் தலைவிதியைத் திருத்தி எழுதிவிட்ட, உச்சநீதிமன்றத்தின் வாயிலில் அமர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

வர்க்க நலனும் சாதி உணர்வும் மத உணர்வும் ஒன்றுகலக்கும் இந்த திரிவேணி சங்கமத்தின் சுழலில், மதநம்பிக்கை முடியும் இடம் எது, வர்க்கநலன் துவங்குமிடம் எது, சாதி உணர்வு ஊடாடும் இடம் எது என்று கண்டறிய முடியாமல், ஒன்று பிறிதொன்றாய்த் தோற்றம் காட்டி நம்மை மயக்குகிறது.

நியாம்கிரி வழக்கில் ஸ்டெரிலைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான கபாடியா, “நான் ஸ்டெரிலைட்டின் பங்குதாரர்” என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டார். இந்திராவோ தீட்சிதர்களின் சொத்துரிமையைக் காக்க எம்ஜியாரிடம் இரகசியமாகத் தலையிட்டார். தமிழ்பாடும் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவான இடைக்காலத் தடையாணையை இரகசியமாக வழங்கிய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷா, தீட்சிதர்களுக்கும் தனக்குமிடையிலான உறவை சிதம்பர இரகசியமாகவே பேணினார். தீர்ப்புகள் கிடக்கட்டும், வாய்தாக்களின் பின்னாலும் வர்க்கநலன் உண்டு என்பதை சிதம்பரம் வழக்கின் 20 ஆண்டு உறக்கம், தனது குறட்டைச் சத்தத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியது.

2004ஆம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ப.சிதம்பரம், பின்னர் நிதி அமைச்சராக அவதரித்து அனில் அகர்வாலுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். 2009இல் அவரே உள்துறை அமைச்சராக உடுப்பணிந்து வந்து, இதோ கலிங்கத்தின் மீது படை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தீட்சிதர்களின் கைலாசக்கதை என்ற மத நம்பிக்கையை, தனி உடைமை என்ற ஆயிரம் கால் மண்டபம் தாங்கி நிற்கிறது. சிவன் சொத்தில் குலம் வளர்த்த செட்டியார்கள், பிள்ளைவாள்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கட்டளைதாரர்கள், ஆதீனங்கள், ஆடல்வல்லானின் சந்நிதியில் மகளுக்கு அரங்கேற்றம் நடத்த வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் .. அனைவரும் இந்த நம்பிக்கையின் கால்கள். அதனால்தான் கைலாசக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்காமல், “ஹரஹர மகாதேவா” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் டோங்கிரியா கோண்டு மக்களின் நம்பிக்கையையும் அவர்களது கடவுளையும் தாங்கி நிற்க அவர்களிடம் தனிஉடைமை இல்லை. அம்மக்கள் நியாம்கிரி மலையின் உண்மையான அறங்காவலர்களாக இருந்தார்கள். எனவேதான் ஒரு வெகுளிச் சிறுமியைத் தரையில் வீழ்த்தி, வல்லுறவு கொள்ளும் கயவனைப்போல, அந்தப் பழங்குடிப் பொதுவுடைமைச் சமூகத்தின் மீது, தனியுடைமையின் புல்டோசர்கள் வெறியுடன் படர்ந்து எறி இறங்குகின்றன. அவர்களுடைய கடவுளான நியாம்தேவனுக்கோ தூக்குதண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டது உச்ச நீதிமன்றம். தங்களுடைய கடவுளின் தலை சீவப்படுவதைக் காணமாட்டாமல் துடிக்கிறது மனித குலம் பெற்றெடுத்த அந்த மழலைச் சமுதாயம்!

···

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ காட்டு வேட்டை என்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கிய இந்தச் சொற்றொடர், பாரதப் பாரம்பரியத்தில் ஊறி உப்பிய மூளையிலிருந்து மட்டுமே பிறந்திருக்க முடியும்.

தண்டகாரண்ய காடுகள் இந்த வேட்டையின் களமாகியிருப்பதும் வரலாற்றின் விதியே போலும்! போர்க்களம் தண்டகாரண்யத்தின் காடுகளெங்கும் விரிய, விரிய, இராமாயணக்கதைகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. கிறிஸ்துவுக்குப் பின், 20 நூற்றாண்டுகள் முன்னோக்கி நடந்து, இதோ, இராமாயண காலத்தை எட்டிவிட்டோம்.

அங்க, வங்க, கலிங்க, கோசல, விதேக, மகத மன்னர்களின் இரதங்கள் உருண்ட பாட்டைகளின் மீது டாடா, எஸ்ஸார், மிட்டல், அகர்வால், பிர்லா, அம்பானிகளின் புஷ்பக விமானங்கள் தரையிறங்குகின்றன. வசிட்டனும் விசுவாமித்திரனும் கௌதமனும் துர்வாசனும் யாக்ஞவல்கியனும் வனாந்திரங்களில் அமைத்திருந்த பர்ணசாலைகள் ‘விருந்தினர் மாளிகை’ என்ற பெயர் தாங்கி மினுக்குகின்றன. வாயிலில் காக்கிச் சீருடையும் கதாயுதமும் தரித்த அனுமன்கள் காவல் நிற்கின்றன.

“இலங்கைத் தீர்வுதான் நமக்கு வழிகாட்டி” என்று கூறி பக்திப் பரவசத்துடன் தெற்கு நோக்கி நமஸ்கரிக்கிறார் சட்டிஸ்கார் டி.ஜி.பி விசுவ பந்து தாஸ். இராம சைன்யம் என்ற பழைய பெயர் அரக்கர்களின் மனதில் அச்சத்தைத் தோற்றுவிப்பதில்லை என்பதால், பாம்புப்படை, கீரிப்படை, கருந்தேள்படை என்று குலமரபுச் சின்னங்கள் தாங்கிய படைகள் அணி வகுத்து நிற்கின்றன. சுக்ரீவனின் சேனைகூட, ‘சல்வா ஜுடும்’ என்று ராட்சஸ மொழியில் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

இராவண வதம் முடியும் வரை முடிசூட்டு விழாவுக்குக் காத்திருக்க முடியாதென முனகும் வீடணர்களுக்காக, விதவிதமான திரிசங்கு சொர்க்கங்களும் இந்திரப் பதவிகளும் ஆர்டரின் பேரில் தயாராகின்றன. போரில் அரக்கர் குலப் பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கூட வேட்டையாட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப தர்ம சாத்திரங்களைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், சிதம்பரம், மன்மோகன், அலுவாலியா, புத்ததேவ், பட்நாயக் முதலான முனிபுங்கவர்கள்.

போர் முழக்கத்தையும் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைத்திருக்கிறார் திருவாளர் சிதம்பரம். இது தேவர் குலத்தைக் காக்க அசுரர்கள் மீது நடத்தப்படும் போர் அல்ல; அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர். அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகப் பூமியைப் பறிக்கும் போர்; வேலையை வழங்குவதற்காகத் தொழிலைப் பறிக்கும் போர்; சோறு போடுவதற்காக வயல்களை அழிக்கும் போர்; பிரம்ம ஞானத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய தெய்வங்களைச் சம்காரம் செய்யும் போர்.

இதோ, நியாம்கிரியின் புதையலின் மீது, அதன் மதிப்பே தெரியாத ஒரு கோண்டு இனப்பெண், சுள்ளிக் கட்டைச் சுமந்து நடக்கிறாள். அவளுடைய கருமைநிறக் கழுத்தில் கிடக்கும் பித்தனை வளையங்களில் வியர்வைத்துளி வழிந்து மின்னுகிறது. கைகளின் அசைவில் அவளது வளையல்கள் எழுப்பும் இரும்பின் ஒலி இசையாய் எழும்புகிறது. அந்தக் கானகத்தின் வண்ணங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் அவள் ஆடை அசைகிறது.

“ராமா, அதோ.. அவள்தான். எடு வில்லை, பூட்டு பாணத்தை’’! என்று ஆணையிடுகிறான் விசுவாமித்திரன். “ஒரு பெண்ணைக் கொல்வதற்கா நான் வித்தை பயின்றேன்?” என்று தயங்கித் தடுமாறுகின்றன சிப்பாயின் விரல்கள். “இவள் பெண்ணல்ல, தாடகை! நம் தர்மத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கி! சுடு….!” என்று உறுமுகிறார் சிதம்பரம்.

சுள்ளிக்கட்டு சரிந்து சிதறுகிறது. மிரட்சியும் கோபமும் உறைந்த அவளது கருவிழிகள் நிலைகுத்தி நிற்கின்றன. வேதாந்தத்தின் வெடிமருந்துக் குச்சிகள் நியாம்தேவனின் மார்பைப் பிளந்து எறிகின்றன.

இந்தப் போர்க்களத்திலிருந்து வெகு தூரத்தில் அயோத்தி நகரின் அமைதிச் சூழலில் தவமிருந்து கொண்டிருக்கிறான் சம்பூகன் என்றொரு ‘சூத்திரன்’. அவன் கேட்க விழையும் வரம் என்னவாக இருக்கக் கூடும்? ஒரு துண்டு நிலம் அல்லது ஒரு வேலை அல்லது மூன்று வேளைச் சோறு அல்லது ஒரு வீடு?

சிதம்பரத்தின் காட்டு வேட்டையை சம்பூகன் அறியமாட்டான். ஆயுதம் ஏந்திப் போரிடும் அரக்கர்களின் மார்பை மட்டுமே அண்ணல் இராமபிரானின் பாணங்கள் குறிவைக்கும் என்ற அரண்மனைப் பொய்யைத் தவிர, இந்தப் போரைப்பற்றி வேறு எதையும் அவன் அறியமாட்டான். தாடகை வதம் அவனுக்குத் தெரியாது. வாலி வதமும் தெரியாது. தன் முன்னே தோன்றக்கூடிய இறைவனிடம், தான் கேட்க விழையும் வரங்களைத் தவிர, வேறு எதன் மீதும் கவனம் செலுத்த அவனது தவம் இடம் கொடுக்கவில்லை. “தவமிருத்தல் மட்டுமல்ல, வரம் கேட்பதும் குற்றமே” என்று தரும சாத்திரத்தின் ஷரத்துகள் திருத்தப்பட்டு விட்டதையும் அவன் அறியமாட்டான்.

நியாம்கிரியின் தலையைக் கொய்த வேதாந்தத்தின் கொடுவாள், உன் கழுத்தையும் குறிவைக்கும் என்பதைச் சம்பூகனுக்குப் புரிய வைத்தால் தவம் கலைத்து அவனும் வாளேந்தக்கூடும்.

ஏந்துவானாயின், இந்த முறை ஆரண்ய காண்டத்துடன் இராமாயணம் முடியவும் கூடும்.

- புதிய கலாச்சாரம், ஜனவரி, 2010

கோயில்கள் ஏற்பட்டது எப்படி?

ஜனவரி 27, 2010

உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோயில்கள்) இருக்கின்றன.

இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம்
பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.

எதுபோலென்றால், சுமார் 40, 50-ஆண்டுகளுக்கு முன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக்கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக்கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு அதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த “அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது” என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000-ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞ், வல்கியர், ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முன்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு, யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000-ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.

இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வைச் செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும், கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும், அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன.

ஒரு இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது.

அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப்பொது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும், பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்குச் சேர்த்துவிட வேண்டும்.

அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்குச் சேருகிறது. அந்த காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும்.

மற்றும், பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிட விசித்திரமானது. இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் ஒரு கோவிலிலாவது இருந்து வருவதாகத் தெரிகிறது. சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்களை நம்பாத மக்களிடத்தில் தான் இந்தத் தீர்த்தம் உபயோகிக்கப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம்
அரசர்களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி, இன்று நடப்பதுபோல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக்காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்றுதான்.

“பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்” என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ´ஆபி டூபாய்´ ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.

மேலும், சாணக்கியர் கூறுவதாவது:

“அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும்.”

“அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்.”

“இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுணம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும், ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும்.

சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் அதிகமாகப் பலனை அளிக்கின்றது. கடவுள் தம் மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஒயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால், கல் விக்கிரகத்தின் உள்ளோ பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகின்றான் என்பதை
இவர்கள் அறிவதில்லை” என்று ´ஆபே டூபாய்´ கூறுகின்றார். இவை போன்று இன்றளவும் கையாப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.

இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக்கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசாவாவது அரசனது பொக்கிஷத்தைச் சேர தவறி விட்டால் அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அது மிகவும் நியாயமே. ஏனெனில், அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும் அரசனது வியாபாரத்திற்காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத்தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும் உண்டு பண்ணி பரிபாலித்து அவற்றைப் பற்றி பெரியதாக விளம்பரப்படுத்தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ அதே போல முன்காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும், உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியோயாகும்.

இம்மாதிரி ´மத ஸ்தாபனங்களை´ ஏற்படுத்தி முற்கால மன்னர்களைச் சுற்றி விரோதிகள் எப்பொழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண்டேயிருந்தன. இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப்பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால் அரசும், கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசர்களுக்கு அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும்.

உதாரணமாக பூரண மதுவிலக்கு ஏற்பட்டால் நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடுமென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்லுவது போல, தங்களது ஷேமமும் கோவில் வருமானத்தில் தொங்கிக் கிடந்தன என்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதன் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார்களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும் கவலையுமெடுக்காது மோட்சலோகத்தைப் பற்றி நினைக்கிறார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்குச் சீட்டு கிடைத்துவிடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு தங்கள் ராஜ்ஜியங்களைவிட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு.

சர்தார் கே.எம். பணிக்கர் அவர்கள் “இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும்” என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.

“பல சிற்றரசர்கள் மிதமிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாதயேயாகும். முன் காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும் தனது சுகமொன்றையே கருதும் துர் நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.
வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்துவிடும். ஆனால் இக்காலத்தில்
அப்படியல்ல. ஒரு அரசன் தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பதுவரையும் நாகரீக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பது வரையும் அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத் தன் இஷ்டம் போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவும், குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டுவிடுகிறார்கள்.”

சர். தாமஸ் மன்ரோவின் அடியிற்கண்ட குறிப்புக்களையும் திரு பணிக்கர் அவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

“இந்தியாவில் மோசமான ராஜ்ய பாரம் ஏற்படுமாயின் அரண்மனையில் புரட்சி உண்டு பண்ணியோ அல்லது உள்நாட்டுக் கலகத்தாலோ அதைச்
சரிபடுத்துவதுதான் வழக்கம். ஆனால், உள்நாட்டு வெளிநாட்டு விரோதிகளினின்றும் மன்னனைக் காப்பாற்ற பிரிட்டிஷ் படைகளிருப்பதால் அவ்விதம் கொடுங்கோன்மையைப் பரிகரிக்கும் வழியெதுவுமில்லாமற் போய்விடுகின்றது. தனது பாதுகாப்புக்கு அன்னியர் உதவியிருக்கிறதென்று நம்பிக்கையால் அவன் சோம்பேறியாய் விடுகின்றான். தனது குடிமக்களுடைய வெறுப்பு தன்னையொன்றுஞ் செய்ய முடியாதவனாகவும் பேராசை பிடித்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.”

கோவில்களிலிருந்து தனக்குப் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதொன்றையே அரசன் கவனிப்பான் என்பது இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து விளங்கும். யார் கோவிலுக்குப் போய் வணங்கினார்கள்; யார் மதுவருந்தினார்கள் என்பதைப்பற்றியெல்லாம் அவன் கவனித்ததில்லை. இவர்கள் சண்டாளராகவும், சூத்திராகவும், வைசியராகவும், சத்திரியராகவும், பிராமணராகவும் இருக்கலாம். சண்டாளனாக விருந்தாலும் அவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனும் திருப்தியடைந்திருப்பான். பணம் வரும் என்று தெரிந்தால் அரசன் தனது விக்கிரகங்களையும், பீடங்களையும், ஸர்ப்பங்களையும் கொண்டு சண்டாளருக்கு விசேஷ வேடிக்கைகளையும் காட்டியிருப்பான். ஒரு சண்டாளன் தனது கோவிலுக்குள் நுழையவோ, விக்கிரகத்தையோ, பாம்பையோ, மரத்தையோ வணங்கவோ செய்யவொட்டாமல் ஓர்
வர்ணாசிரம தர்மி தடுப்பது நிமித்தம் தனது காதுக்கு எட்டினால் இம்மாதிரி தடை செய்பவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் இவர்களை சமீபத்திலிருக்கும் மரத்தில் கட்டி தூக்கியிருப்பான்.

அக்காலத்தில் இந்துக் கோவில்கள் அரசனுடைய வருவாய்க்கு அவ்வளவு தூரம் மூலகாரணமாயிருந்தன. ஆகவே எக்காரணத்தைக் காட்டியேனும் இவன் சண்டாளன்; இவன் தாழ்ந்த சாதி; ஆகையால் கோவிலுக்குள் போகவோ, வணங்கவோ கூடாதென்று யாரேனும் சொன்னால் அவன் அந்த இடத்திலேயே கொடிய குற்றஞ் செய்தவனாகக் கருதப்பட்டிருப்பான்.

கோவில்கள், அரசாங்க ஸ்தாபனங்களாகவிருந்தன; ஏதேனும் ஒரு ஸ்தாபனம் ´பொதுச் சொத்து´ என்று சொல்லக்கூடியதாக இருந்திருந்தால் அது இந்தக் கோவில்களாகும். இப்போது உயர் சாதி இந்து வக்கீல்கள் கோயில்களைப் பொது ஸ்தாபனங்கள் என்று சொல்லும் போது ஒரு புது மாதிரியான விசேஷ அர்த்தத்துடன் சொல்லுகின்றார்கள். பிரதம திருஷ்டியில் நான்கு சாதியாருக்கும் தட்டுத் தடையின்றி இக்கோயில்களில் பிரவேசித்து வழிபட உரிமையுண்டு என்பது இவர்கள் கூற்றாகும்.

“வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மதத்தில் விக்கிரக ஆராதனையில்லை. இது பின்னர் தோன்றிய இழிவுபட்ட ஆராதனையாகும்” என்று காலஞ்சென்ற மாக்ஸ்முல்லர் என்னும் உலகப் பிரசித்தி பெற்ற மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார்.

வங்காள தேசத்து பிரபல வழக்கறிஞரான மிஸ்டர் ஜே.சி. கோஷ் தமது தாகூர் சட்டப் பிரசங்கத்தில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்.

மக்கள் யாகம் முதலியவற்றை நடத்தி வந்த காலத்தில் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்கினியை வளர்க்கலாம். அதனால் அவர்களை அக்கினி ஹோத்திரிகள் என்றழைத்தார்கள். மற்ற சாதியாரும் உயர்ந்த போது அவர்கள் வழிபடத் தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணரது ஆதிக்கம் குறையவும், அக்கினி வணக்கம் தனது செல்வாக்கையிழந்தது. இதிலிருந்து விக்கிரக வணக்கம் ஆரம்பமாயிற்று. மற்றும் புத்த விக்கிரகங்களையும், ஸ்தூபிகளையும் ஸ்தாபித்து புத்த மதத்தினர் வழிபட வாரம்பித்தது இந்துக் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிப்பதற்கு வழிகோலியாயிற்று.

விக்கிரகங்களையும், கோயில்களையும் ஏற்படுத்தியபோது அவற்றைப்
பரிபாலிக்க சொத்துக்களை விட வேண்டியதும் அவசியமாயிற்று! எனவே நிலங்களை விட்டதுமன்றி, பல பழைய கோவில்களில் மக்களை ஈர்க்க (அடிமைப் பெண்களையும்) தாசிகளையும் விட்டார்கள். இதிலிருந்து இந்தியாவில் எந்த நோக்கத்துடன் விக்கிரக ஆராதனை ஆரம்பிக்கப்பட்டது என்பது புலனாகும். இப்பொழுது ஒவ்வொரு கோயிலிலும் நடன சாலை இருப்பதாகவே கருதப்படுகிறது என்று மிஸ்டர் கோஷ் சொல்கிறார்.

பண்டைக்காலத்தில் இக்காலத்திலிருப்பது போலவே கோவில்கள் வேடிக்கை விநோத ஸ்தலங்களாகவே இருந்து வந்தன. இவ்வுத்தேசத்துடன் தான் அக்கால அரசர்களும் ஆலயங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே இந்நாட்டிலிருக்கும் பல கோயில்கள் வேசியர் விடுதிகளைவிடச் சிறந்தவையல்லவென்று காந்தியார் குறிப்பிட்டது சரித்திரப்படியும் மிகையாகாது. இந்நோக்கத்துடனேயே ஆலயங்களை ஸ்தாபித்தார்கள் என்பது சரித்திரப் பூர்வமாக உண்மையாகும்.

- (1970-ம் ஆண்டில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் 92-வது பிறந்த நாள் விழா மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

தேவையா தறுதலைச் சாமிகளின் புராணங்கள்?

ஜனவரி 27, 2010

“கடவுள்களின் திருவிளையாடல்கள்” என்னும் தலைப்பில் 23.06.1945-இல் பெரியார் ´குடிஅரசு´வில் எழுதிய கட்டுரையில் இந்து கடவுள்களின் அவதாரத்தின் மூலம் செய்த சில்மிஷங்களை அதாவது, பார்ப்பனர்கள் கூறிய புராணக் கதைகளின் யோக்கியதையை கேள்விக்குட்படுத்துகிறார்.

நாம் சிந்திக்க வேண்டும். எவ்வளவு கேவலமான அசிங்கம் பிடித்த ஆபாச கதைகளை நமக்கு புராணக் கதைகளாக சொல்லி அதை புனிதப்படுத்த முயலுகிறார்கள் பார்ப்பனர்கள் என்பதும், நம்மை முட்டாள்களாக வைத்திருக்க அவர்களின் புனைவு கதைகளை நாம் ஏற்க வேண்டுமா? என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய சங்கதி.

எண்ணித் தொலையா இப்பாழும் ஆண்சாமி, பெண்சாமிகளின் யோக்கியதையை நாம் போற்ற வேண்டுமா? இந்த புராணங்கள் மக்களுக்கு என்ன ஒழுக்கத்தை படிப்பிக்கிறது?

இதையெல்லாம் ஒழித்தால் தான் நாம் உருப்படுவோம் என்கிறார் பெரியார். எத்தனையெத்தனை வகைப் பெயர்களை வகைப்படுத்தி பொறும்புகிறார்
பெரியார். பாருங்கள்…..

பெண்டாட்டிசாமி, தறுதலைச்சாமி,
கல்லுச்சாமி, மண்ணுச்சாமி,
கட்டைச்சாமி, செம்புச்சாமி,
பொம்மைச்சாமி, வீட்டுச்சாமி,
காட்டுச்சாமி, ஆற்றுச்சாமி,
மயிலேறுஞ்சாமி, குயிலேறுஞ்சாமி,
மாடேறுஞ்சாமி, ஆடேறுஞ்சாமி,
எலியேறுஞ்சாமி, புலியேறுஞ்சாமி,
கழுகேறுஞ்சாமி, குரங்கேறுஞ்சாமி,
ஆனைமுகச்சாமி, ஆமைமுகச்சாமி,
பன்றிமுகச்சாமி, பாம்புமுகச்சாமி,
எலிமுகச்சாமி, புலிமுகச்சாமி,
சிங்கமுகச்சாமி, சிறுத்தைமுகச்சாமி,
கொல்லைப் பிடாரி, எல்லைப் பிடாரி,
குழமாயி, குழந்தையாயி,
அங்கம்மன், அங்காளம்மன்,
மூக்கம்மன், மூத்தாளம்மன்,
பொம்மியம்மன், வெள்ளையம்மன்,
ஜக்கம்மன், தீப்பம்மன், தீப்பாச்சியம்மன்,
சாமூண்டியம்மன், சரவேரியம்மன்,
வள்ளியம்மன், தெய்வானை,
காமாஷி, விசாரலாட்சி,
பேச்சியாயி, லட்சுமி, ஆண்டாள்
முதலிய அம்மாமார்களும்….

சிவன், நாராயணன், பிரம்மன்,
முருகன், அய்யனார், ஆஞ்சிநேயர்,
காட்டான், மாடன், காட்டேரி,
கருப்பண்ணன், முனீஸ்வரன், இருளன்,
பேயாண்டி, பெரியண்ணன், சின்னண்ணன்,
காத்தவராயன், மதுரைவீரன்,
வீரியன், நொண்டி, தூரி, தூண்டி,
நல்லண்ணன், தொட்டியத்து சின்னான்,
மன்னாரு, பனைமரத்தான், நாட்ராயன்
முதலிய அய்யாமார்களும்…

நமது நாட்டைவிட்டு என்று தொலைவார்களோ அன்றே நமது நாடு விடுதலையடையும் நிச்சயம். நிச்சயம்!

போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் தீண்டத்தகாதவன்! – காந்தி

ஜனவரி 27, 2010

1925-ஆம் ஆண்டில் கேரளத்தில் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது காந்தி மற்றும் அவருடைய செயலாளர் மகாதேவ் தேசாய் அவரது மகன் ராமதாஸ் காந்தி சி.ராஜகோபாலாச்சாரியார் உட்பட கேரளத்திற்கு செல்கின்றனர்.

காந்திக்கு பார்ப்பனர்களை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்களிடம் நல்ல பெயரை தங்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையே அதிகமாக இருந்தது. வைதீகப் பார்ப்பனர்களையும் நம்பூதிரிகளையும் சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பினார். ஓர் குறிப்பிட்ட இடத்தில் எல்லோரையும் சந்தித்துப் பேச விரும்புவதாக செய்தி அனுப்பினார்.

ஆனால் நம்பூதிரிகள் பொது இடத்தில் காந்தியை சந்திக்க மறுத்துவிட்டனர்.

“நாங்கள் ஒன்றும் குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் நாங்கள் இருக்கும் இடத்திற்கு காந்தி வந்து எங்களிடம் பேசட்டும்” என்றனர்.

காந்தியார், “அவர்கள் வராவிட்டாலும் பரவாயில்லை. நானே செல்கிறேன்” என்று கிளம்புகிறார்.

அங்கே சாதியைக் குறித்து காரசாரமாக விவாதம் நடைப்பெறுகிறது. அதில் காந்தியின் தெளிவற்ற சிந்தனை அப்பட்டமாகத் தெரிகிறது.

´தீண்டத்தாகதவன்´ இருப்பதற்கு காரணம், ´முற்பிறவி பயன்´ என்பதை ஏற்றுக் கொள்ளும் காந்தி எப்படி மனிதநேயவாதியாக இருக்க முடியும்? என்றொரு கேள்வி நமக்குள் வருகிறது.

ஆய்வாளரான டாக்டர் ரவீந்திரன் எழுதிய “Vaikkam Satyagraka and Gandhi” என்ற ஆங்கில நூலில் 166-வது பக்கத்தில் அங்கு நடைப்பெற்ற விவாதங்களை தொகுத்திருக்கிறார். இவர் வைக்கம் போராட்டத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இனி நம்பூதிரிகள் மற்றும் நம்பியாத்திரிகளுடன் காந்தியார் நடத்திய விவாதத்தை பாருங்கள்:

திரு.இன்டேன்துருத்தில் நம்பியாத்திரி: கர்மா தத்துவத்தை மகாத்மாஜீ; நீங்கள் நம்புகிறீர்களா?

திரு.எம்.கே.காந்தி: ஆம்.

திரு.நம்பியாத்திரி: மறு அவதாரத்திலும் தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

திரு.எம்.கே. காந்தி: ஆம்.

திரு.நம்பியாத்திரி: எங்கள் நம்பிக்கைப்படி எங்கள் ஆச்சாரப்படி போன ஜென்மத்தில் ஒருவன் செய்த பாவத்தின்படி, இந்த ஜென்மத்தில் அவன் நெருங்கக் கூடாத சாதியில் பிறந்திருக்கிறான் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் கேரள ஆச்சாரத்தின்படி கோயிலுக்கு அருகிலுள்ள தெருவில் நடக்கக் கூடாதபடி அவர்களை நடத்தி வருகிறோம். அதனால், இவர்களைத் திருடர்களை விட, கொள்ளைக்காரர்களை விடக் கேவலமாக நினைக்கிறோம்.

(காந்தியாரிடம் பச்சையாகச் சொல்கிறார்கள். காந்திக்குக் கோபம் வர வேண்டுமா, இல்லையா? பெரியாரை வைத்துக் கொண்டு ஒருவன் இப்படிச் சொல்லியிருந்தால் அவர் சும்மா விட்டுவிடுவரா? காந்தியின் பக்தர்களும், காங்கிரஸ் நூற்றாண்டு விழாக் கொண்டாடுபவர்களும் இதைச் சிந்தித்துப் பார்கக் வேண்டும்)

திரு.எம்.கே.காந்தி: கொள்ளைக்காரர்களை விடவும், குடிகாரர்களை விடவும் கேவலமாக அவர்களை ஏன் நடத்துகிறீர்கள்; அதற்குரிய காரணத்தை அறிய விரும்புகிறேன்.

திரு.நம்பியாத்திரி: திருடனோ, குடிகாரனோ சட்டத்தின் உதவி கொண்டு கூட தப்பித்துப் போய்விடலாம். ஆனால், இந்த நெருங்கக் கூடாத சாதிக்காரனுக்குச் சட்டத்தில் அதுமாதிரி தப்பித்துக் கொள்ள இடமே கிடையாது.

திரு.எம்.கே. காந்தி: அவர்கள் அந்தச் சாலைகளில் உட்கார வேண்டுமென்றும் சொல்லவில்லை; அந்த இடத்தில் தங்க வேண்டுமென்று விரும்பவில்லை; அவர்கள் சும்மா அந்த வழியாகப் போக விரும்புகிறார்கள்.

திரு.நம்பியாத்திரி: அவர்கள் அப்படிப் போவதைத் தான் எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

(அடுத்து ஒரு ராஜா சொல்கிறான்)

திரு.வழுடநாகட் ராஜா: அது எங்கள் நம்பிக்கை. போன ஜென்மத்தில் அவன் செய்த கெட்ட கர்மத்தால் அந்தச் சாதியில் பிறந்திருக்கிறான் என்று நம்புகிறோம்.

திரு.எம்.கே.காந்தி: அதை நான் ஒத்துக் கொள்கிறேன். (போன ஜென்மத்தில் செய்த பாவத்தால் தாழ்த்தப்பட்டவனாக தீண்டத்தகாதவனாகப் பிறந்தான் என்பதை கொள்கிறேன் என்கிறார்) ஆனால், நாம்தான் அதற்குத் தண்டனை கொடுப்பதா – நாம் மிருகங்களா?

திரு.நம்பியாத்திரி: உலகத்தில் தவறு செய்கிற மனிதனை மனிதன் தான் தண்டிக்க முடியும். அந்தச் சாதியில் பிறந்ததால் அவர்கள் தண்டிக்கப்படுவது கடவுளின் கட்டளை என்று நினைக்கிறோம்.

திரு.எம்.கே.காந்தி: உண்மை உண்மை தெய்வம் தண்டிக்கட்டும். மனிதர்கள் எப்படித் தண்டிக்க முடியும்? (காந்திக்கே உரிய தந்திரம் இது)

திரு.நம்பியாத்திரி: கடவுள் மனிதன் மூலமாக அதனை செயல்படுத்துகிறான் (கூட்டத்தினர் சிரிப்பு)

[´வைக்கம் போராட்ட வரலாறு´ என்ற நூலில் இருந்து. பக்கம்:47]

ஜாதி ஒழிப்பு – ஆதி சரித்திரம் வைக்கம் சத்தியாக்கிரகம்!

ஜனவரி 27, 2010

மலையாளத்தில் குருவாயூர் கோவில் பிரவேசக் கிளர்ச்சி திரு.கேளப்பன் நாயரால் சத்தியாக்கிகம் முதலியவை நடத்தப்பட்டது. அதை காந்தியார் தடுத்து நிறுத்தி விட்டார். அதனால் கேளப்பன் அவர்கள் காங்கிரசிலிருந்து கூட சில நாள் விலகி கிளர்ச்சி செய்தார் என்பது ஞாபகம்.

இதற்குள் பெரியார் காங்கிரசிலிருந்து விலகிவிட நேர்ந்தது. பிறகு கோவில் பிரவேசக் கிளர்ச்சி பலமாக நடந்தது.

வைக்கம் சத்தியாக்கிரகப் பிரசாரத்தின் பயனாயும் பெரியார் மீது பார்ப்பனர்களுக்குப் பலமான அதிருப்தியும், துவேஷமும் ஏற்படலாயிற்று. இது ஒரு அளவுக்கு உட்பகையை உண்டாக்கிற்று.

குருகுலப் போர் – ஆரிய திராவிடர் போராட்டம்

மற்றும் வி.வி.எஸ்.அய்யரால் ஏற்படுத்தப்பட்ட வர்ணாசிரமப் பிரசார பித்தலாட்ட ஸ்தாபனமான ´குரு குல´ விஷயம் தமிழ்நாடு காங்கிரசிற்குள் வெளிப்படையாகவே பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிளவை உண்டாக்கிவிட்டது.

அதன் பலனாய் முடிவில் சாதி ஒழிப்பு என்பதைப் பற்றிப் பேசினால் அதற்குப் பேர் ´பிராமண துவேஷம்´, ´ஒரு வகுப்பார் மீது துவேஷப் பிரசாரம்´ என்பதாக அரசியல் பிழைப்புக்காரர்களும் மட பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் மந்திரமாக ஆக்கப்பட்டுவிட்டது. இதன் பயனாக பெரியாருக்கு காங்கிரசில் இருக்க இஷ்டமில்லாமல் போய்விட்டது. பெரியார் காங்கிரசிலிருந்து விலகியவுடன் கடைசியாக காங்கிரசின் நிலையானது சாதிப் பிரிவைப் பற்றி பேசினால் அது பிராமண துவேஷம் என்றும், சாதியால் சாதி அணியில் பிற்பட்டு பின்னணியில் இருப்பவர்களுக்கு உரிமை கேட்டால் அது வகுப்புவாதம் என்றும் காங்கிரஸ் கொள்கையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இதை எதிர்பார்த்தே இந்த இரண்டு காரியங்களும் காங்கிரசில் இருந்தால் நம் காரியம் எதுவும் நடவாது என்று கருதி இந்த இரண்டு பிரச்சனை மீதே பெரியார் காங்கிரசிலிருந்து (காஞ்சி மாநாட்டில்) தாமாகவே வெளியேறிவிட்டார்.

இதன் பயனாய் தமிழ் நாட்டில் அரசியலிலும் சமுதாயத்துறையிலும் ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கிவிட்டது.

பெரியாருக்குப் பின் காங்கிரஸ்

பெரியார் காங்கிரசிலிருந்து விலகுகிறவரையில் காங்கிரசில் பெரிய மனிதர்கள் நாட்டில் செல்வாக்குள்ளவர்கள், மதிப்புள்ளவர்கள் முதலியவர்களுக்குத்தான் தலைமைப் பதவியும் முக்கியத்துவமும் இருந்து வந்தது.

பெரியார் காங்கிரசை விட்டு விலகியவுடன் காங்கிரசுப் பார்ப்பனரல்லாதவர்களில் தக்க ஆள் இல்லாமற்போய் (தமிழர்களில்) பச்சகாளான்கள் (சின்ன பையன்கள்) அன்னக் காவடிகள் (அதாவது ´நாளைய´ சாப்பாட்டுக்கு வழியில்லாதிருந்தவர்கள்) மக்களால் சமுதாய விளக்கம் செய்து விளம்பரம் பெற்ற காலிகள், கூலிக்கு ஆக எதுவும் செய்பவர்கள், கொள்கையோ, நாணயமோ, ஒழுக்கமோ இல்லாமல் பதவி எலும்புத் துண்டுகளுக்காக எதுவும் செய்யத் தயாராயிருந்தவர்கள் இருப்பவர்கள் முதலியவர்களே காங்கிரசுக்குப் ´பிரமுகர்´களாக ´தலைவர்´களாக ´காரிய தரிசி´களாக ஆக்கப்பட வேண்டிய அவசியம் நம் பார்ப்பனர்களுக்கு வந்துவிட்டது. அது மாத்திரமல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து நாணயக் குறைவுக்காகவும், துரோகத்துக்காகவும், நீக்கப்பட்டவர்கள் அங்கிருந்து சுயநல ஏமாற்றமடைந்தவார்கள் முதலியோர்கள் காங்கிரஸ் பார்ப்பனர்களால் வலைபோட்டுப் பிடிக்கப்பட்டு காங்கிரசினால் பதவி கொடுக்கப்பட்டு அடிமைகளாக்கிக் கொள்ளப்பட்டார்கள்.

இந்த மாதிரி ஆட்களுக்குக் ´காங்கிரஸ் திட்ட´ மென்னவென்றால், தமிழருக்கு என்று உரிமை கேட்கக் கூடாது. தனது அடிமைத்தனத்தையும், கூலித்தனத்தையும் சொல்லித் தான் கூலி கேட்க வேண்டும்´ ஜாதி வகுப்புப்பற்றிப் பேசவே கூடாது. பேசியதாக செய்தியே வெளியில் வரக்கூடாது. பெரியாரையும் பெரியார் இயக்கத்தையும் காலித்தனமாய், லண்டத்தனமாய் வைவதிலும், தாக்குவதிலும் சிறிதும் பின்வாங்கக்கூடாது என்பதான இப்படிப்பட்ட காரியங்களுக்குத் தயாராய் இருக்கும் நிபந்தனை இல்லாத அடிமைகளையே சேர்த்துக் கொள்வதுமாக ஆகிவிட்டது.

பெரியார் தொண்டால் வீழ்ந்து விட்ட ஆரிய ஆதிக்கம்

´இந்த நிலை பெரியாருக்கு உணர்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தது. இந்தக் காரணங்களே பெரியாரை சாதி, மதம், பார்ப்பனர் நடத்தை ஆகியவை பற்றிய வண்டவாளங்களைத் தாராளமாய் பிரசாரம் செய்ய வசதி அளித்தது. பெரியார் காங்கிரசைவிட்டு விலகின இந்த 33-வருடங்களில் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் தென் இந்தியா முழுவதிலும் திராவிட நாடு முழுவதிலும் பார்ப்பனர்களின் அவர்களது மத, ஜாதி ஆணவத்திற்கும், மதிப்பில்லாமற் போனதுடன், பார்ப்பன ஆதிக்கம் உத்தியோகத்துறையிலும், படிப்புத் துறையிலும், மத ஆதிக்கத் துறையிலும் உள்ள ஏகபோகம் மணல்வீடு சரிவது போல் சரிய ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் இந்தத் தன்மைகளைக் காந்தியாரின் துரோகத் தன்மையைக் கொண்டு இவைகளுக்குப் பாதுகாப்பு செய்ய முன்வந்து அரசியல் சட்டத்தின் முலம் இவைகளுக்குப் பாதுகாப்பு செய்து கொண்டார்கள்.

நிற்க,

கோவில் பிரவேசக் கிளர்ச்சி

வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக்குப் பிறகு பெரியார் காங்கிரசிலிருந்து விலகி வந்து விட்டபோதிலும், அந்த சத்தியாக்கிரக வெற்றியை அனுசரித்து கோவில் பிரவேசக் கிளர்ச்சியைத் தொடர்ந்து பலமாகச் செய்து வந்து கோவில் பிரவேச பிரச்சனையை வைத்தே திருவாங்கூர் கொச்சி இராஜ்யத்தில் நாத்திகப் பிரச்சாரமும், மத ஒழிப்புப் பிரச்சாரமும், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து செய்து இதற்காக கொச்சியில் மகாநாடு கூட்டி “ஈழவ சமுதாய மக்களும் மற்றும் உடனடியாக இந்து மதத்தை விட்டு விலகி இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்து விட வேண்டியது” என்பதான தீர்மானம் ஒன்றை பெரியார் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் இந்த தீர்மானம் வருகிறது என்று தெரிந்து ஆரிய சமாஜம், சீக்கிய மதம், கிருத்துவ மதம், இஸ்லாம் மதம் ஆகிய மதங்களின் தலைவர்களும் பஞ்சாப், டில்லி முதலிய இடங்களில் இருந்த பிரதிநிகளும் வந்து ஈழவ சமுதாயத்தில் உள்ள பல செல்வாக்குள்ள ஆட்களைப் பலவழிகளில் பிடித்துத் தங்கள் தங்கள் மதத்தில் சேர வேண்டியது என்பதாக திருத்தங்கள் கொண்டு வரச் செய்துவிட்டார்கள். ஒவ்வொரு மதக்காரர்களும் தங்கள் தங்கள் மத்தில் ´சாதி இல்லை´ என்று எடுத்துக் காட்டிப் பேசினார்கள்.

என்றாலும் அந்த மாநாட்டில் இஸ்லாம் மதத்திற்கே பெரிய ஆதரவு இருந்தது.

இதைப் பார்த்த கிருத்துவ பாதிரிகள் செல்வாக்குள்ள ஈழவ சமுதாயப் பத்திராதி மக்கள் இரண்டொருவரைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு கலவரத்திற் இடம் உண்டாக்கிவிட்டார்கள்.

இதன் மீது மாநாட்டுத் தலைமை வகித்த பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மாநாடு கலையக் கூடாதே என்று கருதி அத்தீர்மானத்தை ஒரு வகையாய் திருத்தி ஏக கருத்தாக நிறைவேறச் செய்தார்.

இந்து மத்ததை விட்டு விலகுங்கள்.

அத்தீர்மானமாவது : “ஈழவ சமுதாய மக்கள் இந்து மதத்தைவிட்டு விலகிவிடுவது என்பதாக இம்மாநாடு ஏகமனதாய் முடிவு செய்கிறது.

விலகிய பின்பு எந்த மதத்தில் சேருவது என்பது அவரவர்களுடைய சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததாகும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

என்கின்ற தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறிற்று.

இத்தீர்மானத்தை ஆமோதித்த ஒரு பெண் ´தன் சொந்தக் கருத்து கடவுள் மதம் வேண்டாம் என்பதாகும். ஆனால், சமுதாய ஒற்றுமையை முன்னிட்டு இதை ஆமோதிக்கிறேன்´ என்று கூறினார்.

இத்தீர்மானம் நிறைவேறிய உடன் அந்த இடத்திலேயே சுமார் 50-பேர்கள் வரை இஸ்லாமியத்தில் சேர்ந்து துருக்கித் தொப்பியைப் போட்டுக் கூட்டத்திற்கு வந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது அவர்களது தலைவர் டாக்டர் கமால்பாட்சா என்ற பெயரை வைத்துக் கொண்ட ஒரு ஹோமியோபதி டாக்டர், அவர் கொச்சி சுயமரியாதை இயக்கத் தலைவர். அங்கு ஒரு டிஸ்பென்சரி வைத்து நடத்துபவர் சுமார் 30-வயதுள்ள வாலிபர். அதோடு மாத்திரமல்லாமல் அவர் உடனே இஸ்லாம் மதப்பிரச்சாரம் செய்து மக்களை மதமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவர் ஒரு நல்ல பேச்சுக்காரர்.

இஸ்லாம் ஆனார்கள்

இஸ்லாம் என்றால் “அல்லாவே கடவுள் முகமது நபியே கடவுள் தூதர் சாதி இல்லை கடவுளுக்கு உருவம் இல்லை”

ஆகிய இந்த நான்கு விஷயங்களை ஒப்புக் கொள்வது தான் என்பதாக இஸ்லாம் குருமார்களால் அக்கூட்டத்தில் சொல்லச் செய்து அதையே மந்திரமாகக் கொண்டு கிராமம் கிராமமாய்ச் சுற்றி தினம் 10-பேரையாவது இஸ்லாத்தில் சேர்க்காமல் சாப்பிடுவதில்லை என்கின்ற சபதம் எடுத்து கொண்டார்.

இவரைக் கூப்பிட்ட திருவாங்கூரில் இருந்து ஆட்கள் வந்து அழைத்துப் போய் அங்கு ஆலப்புழையில் 200, 300-பேர்கள் மதம் மாற்றப்பட்டார்கள்.

அப்படி மாற்றமடைந்தவர்களில் சிலர் ஆலப்புழையில் ஒரு நாயர் கடையில் போய் மேல்படியில் ஏறி நின்று சாமான் வாங்க ஆரம்பித்தனர். அந்தக் கடைகார நாயர் இவன் கீழ்சாதியான் என்பதை அறிந்து உடனே ஒரு தடியை எடுத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்து கீழே விழும்படிச் செய்து விட்டான். உடனே அங்குள்ள முஸ்லீம்கள் அடிப்பட்டவன் முஸ்லீம் என்பதாக உணர்ந்து கூட்டமாக வந்து அந்த நாயரை அடித்து உயிர் போகும்படிச் செய்துவிட்டார்கள்.

இதன் பிறகு இந்த முஸ்லீம் கலகமாகி 2, 3-பேர் சாகடிக்கப் பட்டுவிட்டார்கள். அப்போது சர். சி.பி. இராமசாமி அய்யர் திருவாங்கூர் திவானாக இருந்தார். அவருக்கு இந்த சங்கதி எட்டினது அவர் அந்த கலகத்தை ´தொழிலாளர் கலகம்´ என்று பெயர் கொடுத்து பத்திரிக்கையில் போடச் செய்து விட்டு உடனடியாக அங்கு நடந்து கொண்டிருந்த இராஜாவின் பிறந்த நாள் விழா அறிக்கையாக ஒரு அறிக்கையைத் தயார் செய்து அதன் மூலம் ´திருவாங்கூர் இராஜ்யத்திலுள்ள கோவில், குளம், மடம், சத்திரம் முதலிய எல்லா இந்துக்களின் பொதுஸ்தாபன இடங்களிலும் திருவாங்கூர் இராஜ்யத்தில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் சம உரிமை உண்டு´ என்ற அரசு விளம்பரம் செய்து கலவரத்தையும், மதம் மாறுதலையும் நிறுத்திவிட்டார்.

இருட்டடிப்புக்கள்

ஆகவே திருவாங்கூர் தெருப் பிரவேசத்திற்கும், கோவில் பிரவேசத்திற்கும் காரணம் அடிப்படை முயற்சி இதுவேயாகும். ஆனால், இந்த விஷயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது குடிஅரசு, திராவிடன் மற்றும் திருவாங்கூர் கொச்சியில் நடந்த சில பத்திரிக்கைகள்! அல்லாமல் மற்றும் திருவாங்கூர் சட்டசபை நடவடிக்கை மூலம் ஒரு அளவு அல்லாமல் மற்றவர்கள் இன்று அறிந்து இருக்கவோ, அறிந்து கொள்ளவோ முடியாமலே போய்விடும்படி பார்ப்பனர்கள் செய்து மறைத்துவிட்டார்கள்.

அவ்வளவு தூரம் போவானேன். வைக்கம் சத்தியாக்கிரக சரித்திரம் என்பதில் அதற்குப் பல வழிகளிலும் கேடு செய்த காந்தி பேர்தான் இருக்குமே ஒழிய, பெரியாரைப் பற்றியோ மற்றும் தமிழ்நாட்டு தொண்டர்கள், தாய்மார்களைப் பற்றியோ ஒரு சொல் கூட அதில் காணப்பட முடியாதபடி செய்திருக்கிறார்கள் இந்தப் பார்ப்பனர்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிய காரணம்

மற்றும் திருவாங்கூரில் இவ்வளவு துணிச்சலான காரியங்கள் நடந்ததற்குக் காரணம் அங்கு பார்ப்பன ஆதிக்கம் பார்ப்பனர் எதிர்ப்பு இல்லை என்பதுதான். இங்கு நடவாமல் இருப்பதற்குக் காரணம் பார்ப்பனர்களும், பார்ப்பன ஆதிக்கமும் வெள்ளையன் ஆட்சி ஒழிந்ததும் மத்திய ஆட்சி ஏற்பட்டதும் அதற்கும் பார்ப்பனர்களே மந்திரியாகவும், தலைவராகவும் ஏற்பட்டதுதானே ஒழிய வேறில்லை.

இன்னும் ஒன்று சொல்லுவோம். அதாவது தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது ´ஒழிக்கப்பட்டது´ என்பதும், கோவில் பிரவேசம் ´அனுமதிக்கப்பட்டது´ என்பதும், மத்திய ஆட்சி ஏற்பட்ட பிறகோ, ஜனநாயகம் ஏற்பட்ட பிறகோ, அல்ல என்பதை கல்லில் எழுதிவைப்போம்.

வெள்ளையன் ஆட்சியில், அதுவும் சைமன் கமிஷனுக்கு சுயமரியாதை இயக்கத்தார் கொடுத்த வரவேற்புப் பத்திரத்தாலும், சமர்ப்பித்து விண்ணப்பத்தாலும், அதைப் பார்த்து,

´இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தால் இந்தப் பார்ப்பனர் அட்டூழியத்திற்கும், கீழ் சாதி ஆக்கப்பட்ட மக்களின் பரிதாபகரமான நிலைக்கும் என்ன பரிகாரம்´ என்று பார்லிமெண்ட்டில் நம்மிடம் அனுதாபமுள்ள சில வெள்ளையர் கேட்டு விளக்கம் பெற்றதாலும் அதைப் பார்த்து இங்கு மதத்திற்குக் கேடில்லாமல், செய்த சில முயற்சிகளாலும் ஏற்பட்டது என்பதைத் தவிர, வேறு காரணம் எதை யார் சொல்ல முடியும்?

இதற்குப் பிறகும்கூட காந்தியார் கோவில் பிரவேசத்தைப் பற்றிப் பேசும்போது அதுவும் சுயமரியாதைப் பிரச்சார நிர்ப்பந்தம் காரணமாய் கோவில் பிரவேசத்தை அனுமதிக்க வேண்டி வந்தபோது,

“கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்ல முடியுமோ அந்த அளவு வரையில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்.”

என்று சொல்லி அனுமதித்ததால் அந்த அளவுக்குத்தான் நாடார் சமுதாயம் உள்பட கோவில் பிரவேசமில்லாத எல்லா மக்களுக்கும் அனுமதி கிடைத்தது.

காந்தியாரின் தந்திரம்

அதன்மீது பெரியார் ஆத்திரப்பட்டு, “தீண்டாமை விலக்கு என்பதும், கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள் ஆனதால் இதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்று வேகமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதன் மீது காந்தியார் மக்களை ஏமாற்ற வேறு தந்திரம் செய்தார்.

அதாவது,

“இதுவரையில் இதற்கு முன் பிராமணர்களுக்கு என்று மாத்திரம் எந்த இடம் இருந்து வந்ததோ அந்த இடத்திற்குப் பிராமணர்களும் செல்லக் கூடாது; மற்ற எல்லா சாதியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்த இடம் வரையிலுமே தான் பிராமணனும் செல்லலாம்” என்று அபிப்பிராயம் கூறி அந்தப்படியே பல கோவில்களில் மூங்கில் கழியைக் கொண்டு தடுப்புகட்டி தடை செய்யப்பட்டது.

பார்ப்பானுக்கு மட்டுமுள்ள தனி உரிமையா?

இதுபற்றி மதுரைக் கோவிலுக்குள் பெரியார் சில தோழர்களுடன் சென்று தடுக்கப்பட்ட இடத்தில் பல பார்ப்பனர்களும், பார்ப்பனத்திகளும் நிற்பதைக் கண்டு அங்கேயே அது பற்றிக் கிளர்ச்சி செய்தார். பத்திரிகையில் எழுதினார் என்றாலும் அர்ச்சகர் என்ற பெயரில் இன்றும் பார்ப்பனர்கள் பார்ப்பனத்திகளும் உள் மண்டபத்தில் இருந்து தான் வணங்குகிறார்கள். இது எப்படியோ இருந்தாலும் பார்ப்பனன்தான் கர்ப்பக கிரகத்திற்குள் சிலை இருக்கும் இடத்திற்குள் போகலாம். மற்றபடி சூத்திரனோ, பஞ்சமனோ என்பவர்கள் கர்ப்பக கிரகத்திற்குள் போகக் கூடாது என்கின்ற சாதி முறை, சாதிபேத முறை இன்றும் தான் இருந்து வருகிறது.

இது விஷயத்தில் காந்தியாருடையவும் பார்ப்பனர்களுடையவும் சூழ்ச்சி எல்லாம்.

பார்ப்பனர்களின் கவலை!

சாதி ஒழிக்கப்படுவதால், பார்ப்பனர்களுடைய தூய்மை கெட்டுவிடுகிறது என்பதோ, தங்கள் நிலைமை அசுத்தமாக்கப்பட்டுவிடுகிறது என்பதோ அல்லவே அல்ல. மற்றென்னவென்றால், தங்களுக்கு பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் உயர்வும், தனி உரிமைகளும், பாடுபடாமல் ஊரார் உழைப்பில் அனுபவிக்கும் சுகபோகமும், உயர்வாழ்வும், ஏகபோகமும் அழிந்துபோகுமே என்கின்ற கவலைதான்.

இதை உத்தேசித்தேதான் சாதி என்பதில் எவ்வித தனிக்கடமையும் இல்லாமல் உயர்வு என்கின்ற உரிமையை மாத்திரம் அனுபவிக்கும்படி சட்டத்தால் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள் இதற்குக் காரணம் காந்தியார் செய்த மோசடியும், சூழ்ச்சியும் ஆன மாபெரும் துரோகம் தான்.

சட்டம் இடம் கொடுக்கவில்லையாம்.

இல்லாவிட்டால் சாதி ஒழிய வேண்டும் என்று நாம் இவ்வளவு தீவிரமான கிளர்ச்சி செய்து 4000-பேர் சிறை சென்று கொடுமையை அனுமதித்துக் கொண்டிருக்கும் போதும், ஒருவராகச் சாகும் நிலையில் இருக்கும் போதும்,

“சாதி ஒழிக்கச் சட்டம் இடம் கொடுக்கவில்லையே என்று அரசாங்கம் சொல்ல முடியுமா?”

அது மாத்திரமா?

“சட்டம் செய்வதால் சாதியை ஒழிக்க முடியாது என்றால் மற்றப்படி எப்படி சாதியை ஒழிக்கலாம் என்பதற்கு ஒரு கமிட்டி ஏற்படுத்துங்கள் என்று பார்லிமெண்ட்டில் எல்லா மெம்பர்களும் ஏகோபித்து கேட்கிற காலத்தில் ´கமிட்டி போடுவதால் சாதி ஒழிக்க வழி கண்டு பிடித்துவிட முடியாது. அதற்கு வேண்டியதை நாங்களே – சர்க்காரே செய்து கொள்கிறோம்´ என்று சொல்லி ஏமாற்ற முடியுமா?

´பிராமணரின்´ மூலாதார உரிமையா?

மற்றும்

´சர்க்கார் ஆதாரப்பத்திரங்களில், வேலைக்கு, பள்ளிக்கூடத்தில் சேர்வதற்குப் போடும் விண்ணப்பத்தில் சாதிப்பெயர் போடக் கூடாது´ என்று உத்தரவு போடுவது மாத்திரம் அரசியல் சுதந்திரத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூலாதார உரிமைக்கு விரோதமல்ல. ஆனால், மக்கள் மடமையை சுயமரியாதைக் கேட்டை அதிகரித்து வளர்க்கும்படியாக அதாவது, ஒருவனை மேல்சாதியான் என்று எண்ணியே அவ்வுணவுச் சாலைக்குள் நுழையும்படி செய்வதற்காகவே பயன்பட வலியுத்தும் உண்டி சாலை பெயர்ப்பலகையில் ´பிராமணன்´ என்று போடுவதை அதுவும் அரசாங்கத்தார் அனுமதிக்கும் சீட்டில் குறிப்பிடுவதை நிறுத்தினால் அது மூலாதார உரிமைக்குக் கேடு செய்ததாகும் என்றால் இதன் கருத்து என்ன? வெள்ளையன் ஆட்சி இருந்தால் நேர்மை வியாக்கியானம் எவராலாவது செய்ய முடியுமா?

வெள்ளையன் ஆட்சி காலத்தில் சர்க்கார் லைசென்சு, கண்டிராக்ட் கொடுத்து நடத்திய ரயில்வே ஓட்டல்களில் ´பிராமணன்´ என்கின்ற சாதிப் பெயர்
பெரியார் சொன்னார். உடனே சென்னை அரசாங்க கவர்னர் பெரியாரை ஒரு மாத வாய்தா கேட்டுக் கொண்டு அதற்குள்ளாக அவருக்கு அதிகாரமில்லாத அந்தக் காரியத்தைச் செய்து முடித்து விட்டார். அப்படிப்பட்ட அந்த வெள்ளையனை வெளியே போ என்று சொன்ன சமூகத் துரோகிகள் இன்று ´தேச பக்தர்கள்´ ஆகிவிட்டார்கள். இப்படிப்பட்ட கொடுங்கோல் கொடுமையாளர்களான இன்றைய அன்னியனை வெளியேறு என்று சொல்லுகிறவர்கள் தான் இன்று துரோகிகளாக இந்தப் பச்சைத் துரோகிகளுக்குக் காணப்படுகிறார்கள். ´இதற்கு ஒப்பு எதைச் சொல்வது? பார்ப்பனர்களை ஒழிக்கப்பாடுபட்ட இரணியனும், இராவணனும்
இராட்சதர்கள் ஆகிவிட்டார்கள்? இவர்களை காட்டிக் கொடுத்து சூழ்ச்சி செய்து கொன்ற பிரகலாதனும், விபீஷணனும் ஆழ்வார்கள் சிரஞ்சீவிகளாக ஆகிவிட்டார்கள்´ என்கின்ற கதையைத் தானே சொல்ல வேண்டும்?

நிற்க, அறிவும் யோக்கியப் பொறுப்பும் உள்ளவர்கள் ஒரு காரியம் செய்ய வேண்டியதை அவசியம் தானா? யோக்கியமானது தானா? இதைப் பெருவாரியான மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பவைகளைத் தானே ´ஜனநாயக முறைக்காரர்கள்´ சிந்திக்க வேண்டும்? அதைவிட்டு விட்டு இது சட்டப்படி செய்ய முடியாதது என்று சொல்வது பொறுப்புள்ளவர்களோ அல்லது அறிவுள்ள மக்களின் ஜனப்பிரதி நிதிகளோ சொல்லும் சமாதானமாகுமா? ஆட்சி என்பது அவரவர்கள் சொந்த அப்பன் வீட்டுச் சொத்து உரிமையா? அவசியமான யோக்கியமான பெருவாரி மக்களுடைய சுயமரியாதைக்குக் கேடான, ஒரு தன்மையை திருத்த வேண்டியதான ஒரு காரியத்தைச் செய்வதற்கு சட்டம் குறுக்கே இருந்தால் உடனே சட்டத்தைத் திருத்த வேண்டியது தானே நேர்மையும் யோக்கியமான கடமையும் ஆகும்.

அதை விட்டு விட்டு விஷயத்தின் முக்கியத்துவம் தெரிந்தும் விஷயத்தின் பயனாய் தாங்களும் கீழ் மக்களாய் இருந்து இழிவை அனுபவித்துக் கொண்டும் இருக்கிற ஆட்சியாளர்கள் ´சட்டம் இடங்கொடுக்கவில்லை செய்ய முடியாது´ என்றால், பிறகு இதற்கு நிவர்த்திதான் என்ன இருக்கிறது? எங்கே இருக்கிறது?

எந்த சட்டம் சாதி ஒழிப்புக்கு குறுக்கே எருமை மாடு மாதிரி படுத்து இருக்கிறதோ அந்த சட்டத்தை எரித்தால் 3-வருடம் கடினகாவல் ரூ1000- அபராதம் என்று புது சட்டம் செய்ய வேண்டிய அவசரம் 8-நாளில் ஏற்பட்டுவிட்ட போது ´இந்திய தேசத்து 25-கோடி பிரதி நிதிகளான 500- பார்லிமெண்டு மெம்பர்களும்! ´சாதி ஒழிக்க சட்டம் செய்ய வேண்டும் என்று ஏகமனதாக விரும்பிய பிறகும், 3-கோடி தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகிய 197- இந்நாட்டு சட்டசபை மெம்பர்களும் ஏகமனதாய் விரும்பிய காரியத்திற்கும் ´சட்டம் செய்வதால் பயனில்லை, சட்டம் செய்யவும் முடியாது.´

என்று அதுவும் சட்டம் செய்ய வேண்டும் என்று கிளர்ச்சி செய்ததற்கு ஆகவே 4000-மக்களை சிறையில் அடைத்துக் கொடுமை செய்து கொண்டு தினம் ஒருவராக சிலரைச் சாகடித்துக் கொண்டும் இருக்கிற சமயத்தில் சொல்லுவது என்றால் சட்டசபை மெம்பர்கள் எல்லோரும் மனிதர்கள் பிரதிநிதிகள் என்கின்ற எண்ணமா? என்று கேட்க மனம் துடிக்கிறது.

இதிலிருந்து சட்டசபையும் மந்திரி சபையும், ´நாட்டு துரோகிகளுக்கு மனித
சமுதாய துரோகிகளுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கும்´ ஸ்தானங்களாகவும், பதவிகளாகவும் தானே கருத வேண்டி இருக்கிறது?

இந்த ´தேசபக்தர்கள்´ வெள்ளையன் ஆட்சியை எந்த விதத்தில் குற்றம் சொல்ல முடியும்? அந்த ஆட்சி போய் விட்டதைப்பற்றி எந்த விதத்தில் மகிழ்ச்சி அடைய முடியும்?

அந்த ஆட்சி இன்று இருந்தால் இந்த நாட்டில் இன்று பறையர்களும் (அரிஜனங்களும்), சூத்திரர்களும், இருக்க முடியுமா? இந்தப் பார்ப்பனர்களாவது இருக்க முடியுமா? நாடுதான் ஆகட்டும் இந்த கைராட்டினம், கை குத்தல் அரிசி´ ´ஆதாரக் கல்வி´ வளர்க்கும் நிலையில் இருந்து வர முடியுமா?

அவ்வளவுக்கு என்? சாதி ஒழிக்கப்பட வேண்டும், சாதி காப்பாற்றப்படும் சட்டம் அழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதற்காக நாலாயிரம் பேர் சிறையில் கொடுமைக்கு ஆளாகி, தினம் ஒருவரைச் சாகடித்துக் கொண்டு இருக்கும் சர்க்கார் உயிரோடு வாழ முடியுமா? வெள்ளையன் ஆட்சி போனதால்,

கொடுமை! கொடுமை!!
கொள்ளை! கொள்ளை!!
என்று தானே சொல்ல முடிகிறது?


Follow

Get every new post delivered to your Inbox.